20 லட்சம் லேப்டாப்.. சர்வதேச டெண்டர் கோரிய தமிழக அரசு.. மடிக்கணினி எப்படி இருக்குது பாருங்க!
சென்னை: 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்படி, 20 லட்சம் லேப்டாப்-களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. இந்த லேப்டாப் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இன்ச் திரை கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு தரப்பில் இலவச லேப்டாப் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்தனர். 2018ஆம் ஆண்டு வரை இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

20 லட்சம் லேப்டாப்கள்
ஆனால் கொரோனா பரவலின் போது அதிமுக ஆட்சியில் இலவச லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியது. அடுத்த 2 ஆண்டு கால ஆட்சியில் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
டெண்டர் கோரிய தமிழக அரசு
இதற்காக தமிழக அரசு தரப்பில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையென்றால் கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருந்தார். அதேபோல் ஒரு லேப்டாப் ரூ.20 ஆயிரம் மதிப்பில் இருக்கும் என்றும் சட்டசபையில் கூறி இருந்தார். இந்த நிலையில் 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எப்படி இருக்கும் லேப்டாப்?
தமிழக அரசின் லேப்டாப் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இன்ச் திரை, ப்ளூடூத் 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 செல் லித்தியன் அயன் பேட்டரி, லேப்டாப்பின் முன்புறம் 720p ஹெச்டி கேமரா, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல்திறன் கொண்டதாக வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சர்வீஸ் சென்டர்
லேப்டாப்களுக்கு ஓராண்டு வாரண்டி, குறைகளுக்கு தீர்வு காண தனி அழைப்பு மையம் அமைக்கவும் நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்தையில் உள்ள எந்த உயர்ரக லேப்டாப்பிற்கும் சளைக்காத வகையில், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் கொண்ட லேப்டாப்பாக இருக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.
எப்போது வழங்கப்படும்?
கடந்த ஆண்டுகளில் அளிக்கப்பட்ட லேப்டாப்களை சர்வீஸ் செய்ய முடியாமல் மாணவர்கள் திணறினர். அதனை இம்முறை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த டெண்டரில் ஏசர், ஹெச்பி, லினோவா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெண்டர் பணிகள் முடிவடைந்த பின், லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications