மாணவர்களுக்கு தேடி வரும் "உணவுத்தொகை".. மாசம் மாசம் பணம் வரப்போகுது.. அரசின் சூப்பர் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கருக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக மாணவர்களுக்கு, பல்வேறு ஆராய்ச்சிகளை செய்பவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் தற்போது ஆதிதிராவிடர், பழங்குடியினர் உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை ₹1,000-ல் இருந்து ₹1400-ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ₹1,100-ல் இருந்து ₹1,500-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் உதவித்தொகை: இது போக முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மூலம் தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி கலை, மனித நேயம் (ம) சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் ஆராய்ச்சி ஊக்கத்தொகை முதல் இரண்டாண்டுகளுக்கு மாதம் ரூ.25,000/- வீதமும், மூன்றாம் ஆண்டிற்கு மாதம் ரூ. 28,000/- வீதம் 12 மாதங்களுக்கும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணாக்கர்களை தெரிவு செய்யும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்த திட்டமிட்டு இதற்கான அறிவிப்பு (https://trb.tn.gov.in/) என்ற இணையதளத்தில் 16.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள விரும்பும் மாணாக்கர்களுக்கு (Full Time Ph.D Programme) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023-24-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணி விண்ணப்பிக்கலாம், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டு: இது போக தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் போதிய நிதிவசதி இல்லாத விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு தேவையான நல உதவிகள் வழங்கிடும் வகையில் "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" (Tamil Nadu Champions Foundation) உருவாக்கப்பட்டு 08.05.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கியுள்ளார்கள். பல்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவித் தொகையாக ரூ.3,96,48,649/- (ரூபாய் மூன்று கோடியே தொண்ணூற்று ஆறு இலட்சத்து நாற்பத்து எட்டு ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து ஒன்பது மட்டும்) வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications