1000ப்பா.. தமிழ்நாட்டில் எஸ்இடிசி பஸ்களின் தோற்றமே மாறப்போகுது.. ஸ்டாலின் அரசு சூப்பர் திட்டம்
சென்னை: தமிழக அரசு ரூ.500 கோடி செலவில் புதிதாக 1000 பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதேபோல் பழுதடைந்து இருக்கும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தை தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். தொலைத்தூர பயணங்கள், சுமார் 200 கிலோ மீட்டர் தூரமுள்ள பயணங்கள், சென்னை போன்ற பெருநகரங்களுக்கான பயணங்களுக்கு மக்கள் விரும்புவது பேருந்துகளை தான்.

அதேபோன்று சமானிய மக்கள் பலர் அரசு பேருந்துகளில் செல்வதை தான் விரும்புகிறார்கள். இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, கார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தாலும், அரசு பேருந்துகளில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
சென்னையில் எல்லாம், ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். சென்னை நகரில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை இன்னமும் பல மடங்கு அதிகரிக்க வேண்டியுள்ளது. அதேபோல் தமிழநாட்டில் வளர்ந்து வரும் கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் விழுப்புரம், கோவை, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய கோட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக பேருந்துகளை வாங்க , முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியில் பேருந்துகள் வாங்குவதுடன், பழுதடைந்து இருக்கும் 500 பழைய பேருந்துகளையும் புதுப்பிக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டமிட்டிருக்கிறது.
அதாவது, தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பேருந்துகளோடு சேர்த்து, 1000 புதிய பேருந்துகள் வாங்கவும், 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் 200 (SETC) விரைவு போக்குவரத்து பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190 பேருந்துகளும், கோவை கோட்டத்தில்163 பேருந்துகளும், மதுரை கோட்டத்தில் 163 பேருந்துகளும், திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகளும் வாங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய பேருந்துகள் தமிழ்நாட்டில் ஓடத்தொடங்கினால் நிச்சயம் அரசு பேருந்துகளில் பயணிக்க விரும்பும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும், புதிய பேருந்துகள் நிறைய வசதிகளுடன் அறிமுகம் ஆனால் தனியார் பேருந்துகளுடனும் போட்டி போட முடியும். குறிப்பாக எஸ்இடிசி பேருந்துகள் நவீன வடிவமைப்பில் இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications