ஓசூரில் விமான நிலையம் எங்கு அமைகிறது? 5 இடங்களை தேர்வு செய்த அரசு.. ஆய்வுக்கு விமான ஆணையம் ஒப்புதல்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. அதன்படி விமான நிலையங்கள் அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பரிந்துரையை இந்திய விமான ஆணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
நம் மாநிலத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்ளது. இது தமிழகம் - கர்நாடகா மாநிலத்தின் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் தற்போது தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் புதிய தொழில் நிறுவனங்கள் ஓசூரை நோக்கி வருகின்றன.

இந்நிலையில் தான் ஓசூரை மேம்படுத்தும் வகையில் புதிதாக அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் ஜூன் மாதம் 27 ம் தேதி தமிழக சட்டசபையில் ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது, மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இதனால் நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.
2,000 ஏக்கர் ஓசூர் ஏர்போர்ட்- போட்டியாக 26 கிமீ-ல் 5,000 ஏக்கர் விமான நிலையம் உருவாக்கும் கர்நாடகா?
அந்தவகையில் ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஓசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன்’’ என்றார்.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியான ஒரு மாதத்தில் தமிழக அரசு சார்பில் முதற்கட்ட பணிகள் வேகமாக தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ள 5 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறு உள்ள 5 இடங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் இந்திய விமான ஆணையத்திடம் பரிந்துரையாக வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டின் ஓசூர் விமான நிலையத்துக்கு கர்நாடகா முட்டுக்கட்டையா? அமைச்சர் பாட்டீல் விளக்கம் இது!
இருப்பினும் அந்த இடங்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் வழங்கிய இந்த பரிந்துரையை ஏற்று இந்திய விமான ஆணையம் இந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஒரு இடத்தை தேர்வு செய்யும். விமானங்கள் சிரமமின்றி வானில் இருந்து தரையிறங்கவும், தரையில் இருந்து பிரச்சனையின்றி புறப்பட்டு செல்லும் வகையில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இதில் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க இந்திய விமான ஆணையம் ஒப்புதல் வழங்கும். அதன்பிறகு விமான நிலையம் அமைப்பதன் அடுத்தகட்ட பணி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications