கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கருணைத் தொகை - யாருக்கு எவ்வளவு அறிக்கை வெளியிட்ட மா.சுப்ரமணியன்
முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப் படி கொரோனா நோய்த் தொற்றால் இறந்த 375 முன்களப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.93.15 கோடி கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்கள் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும் கருணை தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை வீசியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த மே மாதத்தில் உயிரிழந்தனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் கொரோனாவால் மரணமடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். நிவாரண உதவி வழங்க தாமதம் செய்தால் இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டிருந்தார்.

375 முன்களப்பணியாளர்களுக்கு
இந்த நிலையில் கொரோனாவினால் இறந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை தொகைப் பற்றிய விவரத்தினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப் படி கொரோனா நோய்த் தொற்றால் இறந்த 375 முன்களப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.25 இலட்சம் வீதம் மொத்தமாக ரூ.93.15 கோடி கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகள்
கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்கள் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும் கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6483 குழந்தைகளுக்கு (இரண்டு பெற்றோர்கள் (அ) ஒரு பெற்றோர் இழந்தவர்கள்) ரூ.207 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கருணை தொகை வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.50,000 கருணை தொகை வழங்கும் திட்டத்தினை சென்னையில் 10 நபர்களுக்கு கடந்த 8ம் தேதி தொடங்கியதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் கருணை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்குரிய விண்ணப்பங்கள் அரசு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறப்பின் காரணம் கண்டறிய குழு
இதுவரை 42,671 விண்ணப்பங்கள் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் 20,934 பேர்களுக்கு ரூ.50,000 வீதம் ரூ.104.67 கோடி கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது. 18,863 பேர்களுக்கு பரிசீலனையில் உள்ளது. கொரோனாவினால் இறந்த நபர்களின் இறப்பு சான்றிதழ் இல்லாத வாரிசுதாருக்கு உதவும் பொருட்டு மாவட்ட அளவில் இறப்பின் காரணம் கண்டறிய குழு அமைக்கப்பட்டு அந்த குழுக்களின் மூலம் மக்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications