வெறும் 1%.. கைகொடுக்காத மதமாற்றம் .. காலை வாரிய ஹிஜாப்.. பாஜக 3வது பெரிய கட்சியா? உண்மை என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஒரு மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. அதேபோல் நகராட்சியையும் பாஜக கைப்பற்றவில்லை. அதே சமயம் பேரூராட்சியில் குறிப்பிடத்தகுந்த இடங்களை பாஜக வென்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 12838 பதவிகளுக்கு தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இதுவரை வெளியான மாநகராட்சி முடிவுகளில் 21 மாநகராட்சிகளிலும் திமுகதான் முன்னிலை வகிக்கிறது.

திமுக வெற்றி
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 21 மாநகராட்சிகளில் 1090 வார்டுகள் உள்ளது. இதில் 4 பேர் போட்டியின்றி தேர்வானார். மீதம் உள்ள 1086 வார்டுகளில் ஒன்றில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. மீதம் உள்ளத்தில் 760 இடங்களில் திமுக வென்றுள்ளது. அதாவது 70 சதவிகிதத்திற்கும் மேலாக திமுக மாநகராட்சிகளில் வென்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் இதன் மூலம் திமுக கைப்பற்றுகிறது. அதிமுக 134 மாநகராட்சி வார்டுகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 60 மாநகராட்சி வார்டுகளையும், பாஜக 15 மாநகராட்சி வார்டுகளையும் பெற்றுள்ளது. சிபிஐ எம் -21 வார்டுகளை (பாஜகவை விட அதிகம்) பெற்றுள்ளது.

நகராட்சி வார்டு
இன்னொரு பக்கம் நகராட்சி வார்டுகளை கணக்கிட்டால் 18 பேர் போட்டியின்றி தேர்வு, 1 தேர்தல் ரத்து போக 3712 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் அதிமுக 620 இடங்களை வென்றது. திமுக 2286 நகராட்சி இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் 146 இடங்களை வென்றுள்ளது. சிபிஐ எம் - 40 இடங்களை வென்றுள்ளது. பாஜக இங்கு 56 இடங்களை வென்றுள்ளது.

பேரூராட்சி வார்டு
பேரூராட்சி வார்டுகளை பார்த்தால் திமுக 7406 இடங்களில் 4388 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. அதிமுக 1207 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 367 இடங்களை கைப்பற்றி உள்ளது. பாஜக 230 பேரூராட்சி வார்டுகளை வென்றுள்ளது. இந்த நிலையில் பாஜக ஒருவகையில் பார்த்தால் 3வது பெரிய கட்சி போல தெரியலாம். ஆனால் உண்மையில் காங்கிரஸ்தான் அதிக இடங்களை பெற்றுள்ளது.

தனியாக போட்டியிட்ட கட்சி
இருப்பினும் தனியாக போட்டியிட்ட கட்சி என்ற அடிப்படையில் பார்த்தால் பாஜக குறிப்பிடத்தகுந்த இடங்களை பெற்றுள்ளது. இருப்பினும் முதல் இரண்டு இடங்கள் பிடித்த கட்சிக்கும், பாஜகவிற்கு இடையிலான வேறுபாடு மிக அதிகமாக உள்ளது. உதாரணமாக பாஜக 230 பேரூராட்சி வார்டுகளை வென்றுள்ளது அதிகமாக தோன்றலாம். ஆனால் இங்கு திமுக 4388 வார்டுகளையும், அதிமுக 1207 வார்டுகளையும், காங்கிரஸ் 367 வார்டுகளையும் பேரூராட்சியில் வென்றுள்ளது.

பாஜக மூன்றாவது இடம்
இதே கதைதான் நகராட்சி வார்டுகளிலும், மாநகராட்சி வார்டுகளிலும். அதிலும் 760 மாநகராட்சி வார்டுகளில் திமுக வென்றுள்ளது. பாஜக வெறும் 15 வார்டில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது முதல் இடம் பிடித்த திமுகவிற்கும் மூன்றாம் இடம் பிடித்த பாஜகவிற்கும் மிக அதிக இடைவெளி உள்ளது.

அதேபோல் வாக்கு சதவிகித அடிப்படியில்
மாநகராட்சி வார்டுகளில்
திமுக 58.37 சதவிகிதம்
அதிமுக 10.26 சதவிகிதம்
பாஜக 1.16 சதவிகிதம்
நகராட்சி வார்டுகளில்
திமுக 60.19 சதவிகிதம்
அதிமுக 16.16 சதவிகிதம்
பாஜக 1.46 சதவிகிதம்
பேரூராட்சி வார்டுகளில்
திமுக 57.58 சதவிகிதம்
அதிமுக 15.84 சதவிகிதம்
பாஜக 3.02 சதவிகிதம்

வெறும் 1 சதவிகிதம் மட்டுமே
இதில் பேரூராட்சி வார்டுகளில் மட்டுமே பாஜக 3 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. மற்ற நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் வெறும் 1 சதவிகித வாக்கு மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக உண்மையில் 3வது பெரிய கட்சியா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பாஜக மதமாற்ற விவகாரத்தை கையில் எடுத்தது. அரியலூர் மாணவி வழக்கு பற்றி பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தது.

உதவவில்லை
அதேபோல் திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை, மக்களுக்கு தரப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று புகார் வைத்தது. தேர்தல் நாள் அன்றும் அதற்கு முன்பும் கூட ஹிஜாப் சர்ச்சை பேசுபொருளானது. ஆனால் பாஜகவிற்கு இது பெரிய அளவில் தேர்தலில் உதவியதாக தெரியவில்லை. மாநகராட்சி, நகராட்சிகளில் பாஜக வெறும் 1 சதவிகிதம் மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளதால்.. அக்கட்சி அரசியல் வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications