ஜிஎஸ்டி 2.0.. பால் விலையைக் குறைத்த தனியார் நிறுவனங்கள்! ஆனால் ஆவின் ஏமாத்துதே! பறந்த கண்டனம்!
சென்னை: ஜிஎஸ்டி குறைப்பை தொடர்ந்து பால் பொருட்கள் விற்பனை விலையை தனியார் பால் நிறுவனங்கள் குறைத்துள்ள நிலையில், விற்பனை விலையை குறைக்காமல் தள்ளுபடி என்ற பெயரில் ஆவின் நிறுவனம் ஏமாற்றுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," கடந்த சில வாரங்களுக்கு முன் (செப்டம்பர்-3) நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் UHT பால் மற்றும் பன்னீர் வகைகளுக்கு ஜிஎஸ்டியில் (5%) இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 12%லிருந்து 5% ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளுக்கு 18%லிருந்து 5% ஆகவும் ஜிஎஸ்டியை குறைப்பதென்றும் மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பு
இதன் அடிப்படையில் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் ஜிஎஸ்டி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி குறைப்பில் வரும் பால் பொருட்களுக்கான விற்பனை விலையை குறைக்க வேண்டும் (குறிப்பாக நெய்க்கு லிட்டருக்கு 50.00ரூபாய் வரையிலும், வெண்ணெய் ஒரு கிலோவிற்கு 40.00ரூபாய் வரையிலும்) என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை முன் வைத்தது. இந்த சூழலில் இன்று முதல் (செப்டம்பர்-22) ஜிஎஸ்டி குறைப்பு அமுலுக்கு வருவதால் பால் பொருட்கள் உற்பத்தியில் உள்ள மில்கி மிஸ்ட், சீனிவாசா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பல ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்குவதற்கான முயற்சியில் அதன் விற்பனை விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன.
பால் விலை
இன்று (செப்டம்பர்-22) முதல் நெய் ஒரு லிட்டருக்கு 50.00ரூபாய் வரையிலும், வெண்ணெய் ஒரு கிலோவிற்கு 30.00ரூபாய் வரையிலும், சீஸ் ஒரு கிலோவிற்கு 40.00ரூபாய் வரையிலும், பனீர் ஒரு கிலோவிற்கு 25.00ரூபாய் வரையிலும், UHT பால் லிட்டருக்கு 3.00ரூபாய் வரையிலும், ஐஸ்கிரீம் வகைகளுக்கு குறைந்தபட்சம் 5.00ரூபாய் வரையிலும் விற்பனை விலையை குறைத்துள்ளன. தனியார் பால் நிறுவனங்களின் மக்கள் நலன் சார்ந்த இந்த செயல்பாடுகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முழு மனதுடன் வரவேற்பதோடு மனதார பாராட்டுகிறது.
ஆவின் விலைகுறைப்பு
அதேசமயம் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினோ ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்காமல் "நெய் சந்தை நிலைமை மற்றும் விற்பனையை கருத்தில் கொண்டு, நெய் வாடிக்கையாளர்களுக்கு 22.09.2025 முதல் 30.11.2025 வரை தள்ளுபடி" கொடுப்பது போல் தெரிவித்திருப்பதும், வெண்ணெய், சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை விலையை குறைக்காமல், நெய், பன்னீர், UHT பால் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை மட்டும் சலுகை விலையில் வழங்குவது போல அதற்கான விலைப்பட்டியலை 19.09.2025 தேதியிட்ட (Ref. NO.3331/N3/Mkg/20025) கடிதம் மூலம் ஆவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பால் முகவர்கள்
இதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கும் வகையில் நெய் விற்பனை விலை குறைப்பை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும், அத்துடன் வெண்ணெய், பன்னீர், சீஸ், UHT பால், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையையும் முழுமையாக குறைக்க ஆவின் நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அவ்வாறு ஆவின் நிர்வாகம் ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை குறைக்க முன் வராவிட்டால் மத்திய அரசு ஆவின் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
ஆவினுக்கு கண்டனம்
மேலும் ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலை கணிசமாக குறைந்திடவும் இதனால் பொதுமக்கள் பெரிதும் பலனடைவார்கள் என்பதாலும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு காரணமாக இருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications