வீடு, மனை வாங்க போறீங்களா? பத்திரப்பதிவு துறையில் மெகா மாற்றம்! இனி கையெழுத்து, கைநாட்டு தேவையில்லை?
சென்னை: சொத்து பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை முற்றிலும் தடுக்க, சொத்து விற்பனை மற்றும் வாங்கல் பத்திரங்களில் விற்பவர், வாங்குபவர் இருவரும் 'டிஜிட்டல்' முறையில் கையெழுத்திடும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து பதிவுத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கும் போது, பத்திரப் பதிவுத் துறை மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் வீடுகள் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் பத்திரப் பதிவுத் துறை மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுகிறது.
பின்னர் அது வருவாய் துறை சார்ந்த ஆவணங்களில் பதியப்படுகிறது. இந்த நிலையில் வீடு, மனை உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான பரிவர்த்தனைகளில் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் பயன்படுத்துதல், உரிமையாளருக்கு தெரியாமலே சொத்து அபகரிப்பு போன்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பத்திரப்பதிவு துறை
சார் பதிவாளர்கள் எவ்வளவு கவனமாக செயல்பட்டாலும், சில நேரங்களில் போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. குறிப்பாக, சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் கையெழுத்தை வெளியாட்கள் போலியாக போடும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரிய சவாலாக உள்ளது. இந்த மோசடிகளை கட்டுப்படுத்த, காகிதத்தில் கைஎழுத்திடும் முறைக்கு மாற்றாக, 'டிஜிட்டல்' கையெழுத்து முறையை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது.
டிஜிட்டல் கையெழுத்து
ஏற்கனவே அரசு துறைகளில் உத்தரவுகள், கடிதங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் உயர் அதிகாரிகள் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தி வரும் நிலையில், அதே முறையை சொத்து பத்திரப் பதிவிலும் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில்," பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சொத்து பத்திரப் பதிவை எளிமைப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் பதிவுகளை மேற்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்டார் 3.0
'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் ஆன்லைன் பதிவு நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது சார் பதிவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்கள் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், பொதுமக்களும் பத்திரப் பதிவின்போது டிஜிட்டல் கையெழுத்திடும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால், பத்திரப் பதிவில் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்" என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
சொத்து பரிவர்த்தனை
தற்போதைய காலத்தில் பெரும்பாலான ஆவணங்கள் கணினி மூலம் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் கையெழுத்து மட்டும் கைமுறையாக போடப்படும் நிலை இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக, கணினியில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் நேரடியாக டிஜிட்டல் கையெழுத்திடும் வசதி தற்போது கிடைக்கிறது. அரசு மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதற்கான சேவையை வழங்கி வருகின்றன.
ஆன்லைன் பதிவு
பொதுமக்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றுகளை வழங்கி, கட்டணம் செலுத்தி தனிப்பட்ட டிஜிட்டல் கையெழுத்துக்கான ரகசிய குறியீட்டை பெறலாம். இதன் மூலம் எந்த ஆவணத்திலும் பாதுகாப்புடன் கையெழுத்திட முடியும். தற்போது சுமார் ரூ.1,500 கட்டணத்தில் இந்த வசதி கிடைக்கிறது. உரிய சான்றுகள் உள்ள யார் வேண்டுமானாலும் இதைப் பெறலாம் என்றும், ஒருவரின் டிஜிட்டல் கையெழுத்தை வேறு யாரும் போலியாக பயன்படுத்த முடியாத அளவிற்கு பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், சொத்து பரிவர்த்தனைகளில் மோசடிகள் பெருமளவில் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications