குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி பேசியதாக பொய் தகவல்- போலீசில் ராஜ்பவன் புகார்!
சென்னை: தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக பொய்யான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுநர் கீழ்க்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். அதாவது " குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும். தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும்- ஆளுநர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.

இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல் மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. அமைதியின்மையை உருவாக்குகிறது.

இந்தப் போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது.
இந்த பிரச்சனையை உடனடியாக எங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications