யார் யாருடன்? கட்சிகளிடையே "கள்ள உறவு".. பாஜகவால் 'நாராசமாக' திசைமாறும் தமிழக அரசியல் களம்!
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் இப்போது எந்த கட்சியுடன் எந்த கட்சி கள்ள உறவு வைத்தது? எந்த கட்சியுடன் எந்த கட்சி கள்ள உறவை வைத்துக் கொண்டிருக்கிறது என்கிற கேவலமான விவாதங்கள்தான் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. "எதிர்த்தால் எதிரி; ஆதரித்தால் உற்ற துணை" என்கிற உறுதியான தனித்துவமான அரசியல் களத்தைக் கொண்டிருந்த தமிழ்நாடு அரசியல்தான் இப்போது நாராசமான 'கள்ள உறவு' விமர்சனங்களால் அதகளமாகிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசியலில் தமிழ்நாடு அரசியல் களம் தனித்துவமானது. தமிழ்நாட்டு அரசியலில் யார் யாருடனும் கூட்டணி சேர்ந்துவிடலாம் என்கிற போக்கு அவ்வளவு எளிதானதாக இருந்தது இல்லை. கொள்கை கோட்பாடு என்கிற போக்கில்தான் அரசியல் கூட்டணிகள் அமைந்திருந்தன.

திமுகவின் அன்றைய நிலைப்பாடு: 1975-76-ல் அவசர நிலை பிரகடனத்தின் மூலமாக திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என களமாடிய இந்திரா காந்தி அம்மையாரின் காங்கிரஸுடன் 1980-ல் அதே திமுக கூட்டணி அமைத்தது. ஆனால் அப்போதும் கூட உறவுக்கு கை கொடுப்போம்- உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்கிற 'கொள்கை' முழக்கத்தை திமுக முன்வைத்தது. இது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என்பதால் அப்போது தமிழ்நாட்டு மக்கள் இந்த கூட்டணியை நிராகரிக்கவே செய்தனர். இதனால் இயல்பாகவே அண்ணா திமுகவும் காங்கிரஸும் 'இயற்கை கூட்டணியாக' செயல்பட்டன.
1990களின் கூட்டணி: 1990களில் தேசிய அளவில் மாநில கட்சிகள் கூட்டணியாக தேசிய முன்னணி உருவான போது தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஆதரவு தரவும் தயங்கவில்லை. ஏனெனில் அப்போது சமூக நீதி, இடஒதுக்கீடு குறித்த ஆகப் பெரும் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசியல் களமும் வாக்காளர்களும் உள்வாங்கி இருந்தனர். விபி சிங் அமல்படுத்திய 27% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு கொடுத்து அமைதி காத்த ஒரே மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே இருந்தது என்பதும் வரலாறு.
பாஜகவும் தமிழகமும்: 1996-க்குப் பிந்தைய இந்திய அரசியல் கூட்டணி சகாப்தத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழ்நாட்டு வாக்களர்களிடையேயும் குழப்பம் உருவாகி அரசியல் களத்தில் இருந்த இறுக்கமான கொள்கை கோட்பாடு என்பது தளர்வடையத் தொடங்கியது. இதனால்தான் தமிழ்நாட்டு மக்களால் அன்றும் இன்றும் நிராகரிக்கப்பட்ட பாஜகவுடன் அதிமுக, திமுக கூட்டணி வைத்த போதும் சகித்துக் கொண்டவர்களாக இருந்தனர்.
கருணாநிதி, ஜெயலலிதா காலம்: 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின் கூட்டணியை மக்கள் ஏற்கத்தான் செய்திருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் பாஜகவுடன் எந்த ஒரு கட்சி கூட்டணி வைத்தாலும் அதை நிராகரிக்கவும் செய்வதை திட்டவட்டமான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனால்தான் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தாங்கள் மறையும் வரை பாஜகவிடம் இருந்து விலகியே இருந்தனர். இந்த தனித்துவமான அரசியல் களம் பிற மாநிலங்களில் இல்லாமல் இருந்தது.
அண்டை மாநிலங்கள் நிலவரம்: கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி பாஜக, காங்கிரஸுடன் மாறி மாறி கூட்டணி வைப்பதே ஒரு கொள்கையாவிட்டது. ஆந்திராவில் தெலுங்கு தேசமும் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் பாஜகவுடன் கை கோர்க்க தயங்குவதில்லை. ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளமும் கூட இப்போதைய தேர்தல் தோல்விக்கு முன்னர் வரை பாஜகவுடன் மிதமான நல்லுறவைத்தான் கொண்டிருந்தது. தெலுங்கானா பிஆர்எஸ் கட்சியும் இந்தப் போக்கில்தான் இருந்தது. கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸும் பாஜகவுடன் எப்போதும் இணைந்து செயல்பட முடியாதவை என்பதால் அந்த களம் வேறானது.
பாஜகவுடன் அதிமுக, திமுக: ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவுடன் பகிரங்கமாக கை கோர்க்கிற அரசியல் போக்கும் மறைமுகமாக நல்லுறவை பேணுகிற போக்கும் தமிழ்நாட்டில் தலைதூக்கி இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் முதல்வர்களாக இருந்தனர். ஓபிஎஸ்-க்கு பாஜகவின் 'அனுசரணையால்' திமுக மறைமுக ஆதரவு கொடுத்தது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்தது. பின்னர் இபிஎஸ் காலத்தில் பாஜகவும் அதிமுகவும் கை கோர்த்தே செயல்பட்டன. ஆனாலும் அதிமுகவும் திமுகவும் ஏதோ ஒருவகையில் பாஜகவுடன் திரைமறைவான உறவில் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
அதிமுக- பாஜக: ஒரு கட்டத்தில் பாஜக உறவை துண்டிப்பதாக அண்ணா திமுக அறிவித்தாலும் 'கள்ள உறவு' இருக்கிறது என திமுக கடுமையாக விமர்சித்தது. பாஜகவின் பி டீம்தான் அதிமுக என்கிற விமர்சனத்தை ஆட்சிக்கு வந்த பின்னரும் திமுக கைவிடவில்லை.
திமுகவும் பாஜகவும்: ஆனால் ஆட்சியில் அமர்ந்த திமுக, மத்திய அரசுக்ககு எதிராக உரிமைப் போராட்டம் நடத்துவதாக கூறிக் கொண்டே அறிக்கைகளை வெளியிடுகிறது; ஆர்ப்பாட்டம் நடத்துகிறது; எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெறுகிறது; நாடாளுமன்றத்தில் ஆவேசம் காட்டுகிறது.
நிலைமாறும் திமுக: அதே திமுகதான் 'நடைமுறையில்' பாஜக மற்றும் டெல்லியுடன் மறைமுகமாக நல்லுறவை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது. தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்; சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டையும் திராவிடத்தையும் வேரறுக்கும் வகையில் பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின விழாவில் திமுக அரசு பங்கேற்றது; திமுக பங்கேற்கவில்லை; தமிழ்நாடு அரசுதான் பங்கேற்றது என்கிற சப்பைகட்டும் கட்டப்பட்டது. இதன் உச்சமாக, நேரடியாகவே தமிழ்நாடு அரசு நடத்திய கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவழைக்கப்பட்டார்; அத்துடன் தமிழ்நாட்டு பாஜக தலைவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது.
கள்ள உறவு விமர்சனங்கள்: இதனால்தான் இப்போது திமுக- பாஜகவுடனான கள்ள உறவு என்கிற விமர்சனத்தை அதிமுக முன்வைக்கிறது. இதற்கு லாவணிக் கச்சேரியாக நீங்கள் மட்டும் பாஜகவுடன் கள்ள உறவில் இல்லையா? என்கிற கேவலமான நாராசமான நரகல் விமர்சனங்கள் தமிழ்நாட்டு அரசியலில் தலைதூக்கி நிற்கின்றன. டெல்லியில் ஆட்சியில் இருப்பதால்தான் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு இப்படி அனுசரணையாக நடக்கிறது என்கிற வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மத்திய ஆளும் பாஜக அரசு எந்த ஒரு நிதியையும் வாரி கொடுக்கவில்லை; எந்த திட்டங்களுக்கும் முன்னுரிமை தந்துவிடவும் இல்லை; நீட் தேர்வில் இருந்து விலக்கு கூட தரவில்லை. திமுக அரசின் அனுசரணை என்பது 'சிலருக்கு' தனிநபர் ஆதாயம்தான் என்பது வெட்ட வெளிச்சமானது. இது திமுகவின் நிலையான பாஜக எதிர்ப்பு என்கிற கோட்பாட்டின் மீது மெல்ல தெளிக்கப்பட்ட அமிலம்தான். இது திமுகவின் வாக்கு வங்கியை மெல்ல மெல்ல அரித்தே அழிக்கும்; இதனைத்தான் பாஜகவும் விரும்புகிறது என்பதை 'கொள்கை கோட்பாடு' பேசும் திமுக புரியாமலா இருக்கும்? என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். எப்படியோ அண்ணா திமுகவும் திமுகவும் பாஜகவின் 'தயவுக்காக' தமிழ்நாட்டு அரசியல் களத்தை தறுதலைக் களமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் ஆதங்கம்.
-
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications