SIR: நீக்கப்பட்ட பெயர்களை.. காரணத்துடன் பொது வெளியில் வெளியிட வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை, தமிழ்நாட்டில் அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் தேர்தல் ஆணையம் பகிரங்கமாக ஒட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர் விடுபட்டு இருக்கிறது.

பொது இடங்களில் ஒட்ட வேண்டும்
தமிழ்நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பணிகளில், வாக்காளரின் பெயர்கள் விடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் விடுபட்ட பெயர்களை, அதாவது தர்க்க ரீதியான முரண்பாடுகள் என்ற காரணத்திற்காக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை தமிழ்நாட்டின் அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் தேர்தல் ஆணையம் ஒட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கால அவகாசம்
இந்தப் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து சரிபார்க்க 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக பெயர்களை நீக்கி உள்ளது.
அதாவது, தந்தை பெயரில் மாற்றம் இருப்பது, பெற்றோரின் வயதில் முரண்பாடு, பெற்றோருக்கும் குழந்தைக்கு 50 வயதுக்கு மேல் வித்தியாசம் இருப்பது, அல்லது தாத்தா பாட்டிக்கும் பேரப்பிள்ளைக்கும் 40 வயதிற்கும் குறைவாக வித்தியாசம் இருப்பது, போன்ற காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
ஒரே நபருக்கு ஆறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக பதிவாகி இருப்பது, போன்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. 2002 அல்லது 2005 ஆம் ஆண்டு தரவுகளுடன் தற்போதைய தரவுகள் பொருந்தாமல் இருப்பதாலும் நீக்கப்படுகிறது.
கபில் சிபல் வாதம்
இதனையடுத்து, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில்.. ஏறக்குறைய 1.16 கோடி பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், சுமார் 1.22 கோடி வாக்காளர்களுக்கு இன்னும் முறையான நோட்டீஸ் சென்றடையவில்லை என்றும், காரணத்தை தெரிவிக்காமல் பெயர்கள் நீக்கினால், மக்கள் இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் குழம்புவார்கள் என்றும் முறையிட்டார். எனவே, காரணத்துடன் பட்டியலை ஒட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
வாக்காளர்கள் நேரடியாகவோ அல்லது அரசியல் கட்சிகளின் பூத் லெவல் ஏஜெண்டுகள் மூலமாகவோ, தாலுகா அலுவலகங்களில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இதற்கான பணிகளை சீராக செய்ய தேவையான மனித வளத்தை வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications