வாடகை வண்டி.. ஹைவேஸில் ஃபாஸ்டேக்.. பரந்தூர் டோல்கேட் வசூல் ஞாபகமிருக்கா? ஜவாஹிருல்லா ஒரே போடு.. ஆஹா
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.. இது தொடர்பாக முற்றுகை போராட்டம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். என்ன காரணம்?
தமிழகத்தில், ஏற்கனவே சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் மறைமுகமாக உயர்ந்து வரும்நிலையில், சுங்கக்கட்டணமும் உயர்த்துவது கடும் அதிருப்திகளைஏற்படுத்தி வருகிறது. அதனால், சாலை அமைப்பிற்கான கட்டணத்தை வசூல் செய்தபிறகு, சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கியிருக்கின்றன.
அதேபோல, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளதாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சுங்கச்சாவடி: எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் வருகிறார்கள். அந்தவகையில், தமிழகத்தின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹில்லா முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது.
புள்ளி விவரங்கள்: இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது அதன் வாயிலாகச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்கிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளிப்படைத் தன்மையோடு அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. ஃபாஸ்ட் டாக் என்ற பெயரில் வசூலிக்கப்படும் முன் தொகை வாயிலாகப் பெருமளவில் பொருளாதாரம் வாகன உரிமையாளர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது.
வாகன உயர்வு: கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வின் வாயிலாகப் பேருந்து கட்டண உயர்வு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படுவதோடு விலைவாசிகளின் உயர்வும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரந்தூர் சுங்கச் சாவடியில் கூடுதலாக ரூபாய் 28 கோடி வசூல் செய்தது என இந்தியத் தலைமை கணக்காயர் அறிக்கை அளித்ததும் கவனிக்கத்தக்கது
அறிக்கை: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் என்எச்ஏஐ எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாகச் சுங்க கட்டண உயர்வினைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்க நேரிடும்" எச்சரித்திருக்கிறார் ஜவாஹிருல்லா.












Click it and Unblock the Notifications