சோலியை முடித்த SIR.. 10,15 வருஷம் பின்னே போயிருச்சே நம்ம தமிழகம்! 2011, 2016 வாக்காளர் நிலவரம் என்ன?
சென்னை: தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'எஸ்ஐஆர்' (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முடிவுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பணியின் மூலம், தமிழகத்தில் மட்டும் 97 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான நீக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இந்த எஸ்ஐஆர் பணிகள், கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கின. மாநிலத்தில் உள்ள சுமார் 6.41 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டன.
பின்னர் அந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், நேற்று மாநிலம் முழுவதற்குமான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியல்
அதன்படி, எஸ்ஐஆர் பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் வாக்காளர்களாக இருந்தனர். தற்போது வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்ஐஆர் பணி
தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 06 ஆயிரத்து 333 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,191 பேர் உள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையம்
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நேரடியாக மூன்று முறை ஆய்வு செய்தும் கண்டறிய முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், ஒரே நபர் பல இடங்களில் பதிவு செய்திருந்த பெயர்கள் ஆகியவை இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், எஸ்ஐஆர் பணியின் விளைவாக தமிழக வாக்காளர் எண்ணிக்கை, சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் காலத்தில் தமிழகத்தில் சுமார் 4.5 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 2026 தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், மீண்டும் அதைவிட சற்றே அதிக அளவிற்கே வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 2011 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் அப்போது 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர். ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரம் பேரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போதைய எண்ணிக்கையை விட சுமார் ஒரு கோடி குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
2016 வாக்காளர்கள் எண்ணிக்கை
இதேபோல், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் கடந்த 20.01.2016 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் அப்போது 5.79 கோடி வாக்காளர்கள், ஆண் வாக்காளர்கள் - 2.88 கோடி, பெண் வாக்காளர்கள் - 2.91 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4383 இருந்தனர். இது தற்போதைய எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications