திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் பல நூறு கோடி ரூபாய் வக்பு சொத்துக்கள் மீட்பு! வக்பு வாரியம் தகவல்!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துக்கள் மீட்கப்படுள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், வக்பு சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருப்போர் அவர்களாகவே அவைகளை விட்டு விலகிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதல்வர் ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரானதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு நிலங்களை மீட்க முழு கவனம் செலுத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஆண்டு எனது தலைமையில் புதிதாக வக்பு வாரியம் அமைக்கப்பட்டதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துகளை மீட்கவும், வக்பு சொத்துகளை விற்பனை செய்ய விடாமல் தடுக்கவும் தீவிர முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன.

திண்டுக்கல் பேகம்பூர்
இதற்காக தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு பட்டியல் அளிக்கப்பட்டு பத்திரப்பதிவு மூலம் வக்பு நிலங்கள் விற்பனையாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்கும் முயற்சியில் திண்டுக்கல் பேகம்பூர் மஸ்ஜிதுக்கு சொந்தமான ரூபாய் 500 கோடி மதிப்பிலான 65 ஏக்கர் நிலம், திருச்சி ஹஜரத் நபி ஸல் பாத்திஹா வக்புக்கு சொந்தமான ரூபாய் 12 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி ஜாமிஆ மஸ்ஜித்
இதேபோல் தூத்துக்குடி ஜாமிஆ மஸ்ஜிதுக்கு பாத்தியப்பட்ட ரூபாய் 50 கோடி மதிப்பிலான அரிசி ஆலை, விழுப்புரம் வளவனூரில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம், நாகூரில் ரூ.4 கோடி மதிப்பிலான தர்காவுக்கு பாத்தியப்பட்ட நிலம் போன்ற பல ஏக்கர் வக்பு நிலங்கள் இந்த ஒரு வருட காலத்தில் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா மேல்விஷாரம் நகரில் நெடுஞ்சாலையை ஒட்டி 16 சர்வே எண்களில் 31.61 ஏக்கர் நிலம் புட்டி பேகம் சாகிபா சவுத்ரி வக்புக்கு சொந்தமானது. இது தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைகேடான வழியில்
இந்த நிலத்தில் ரூபாய் 17 கோடி மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததும் அதை தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு வக்பு வாரியம் முழுவீச்சில் இறங்கியது. சம்மந்தப்பட்ட ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வக்பு நிலமீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடும் எச்சரிக்கை
வக்பு சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருப்போர் அவர்களாகவே அவைகளை விட்டு விலகிக்கொள்ள வேண்டும். அதனை கைமாற்றம் செய்ய முயன்றால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications