தாஜ்மஹாலை பின் தள்ளிய மகாபலிபுரம்.. ஆனாலும் தமிழக சுற்றுலா துறையில் பாராமுகம் காட்டும் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில்தான் தாஜ்மஹாலை பின்னுக்குத் தள்ளி, மகாபலிபுரம் அதிக சுற்றுலா பார்வையாளர்களை ஈர்த்து முதலிடத்திற்கு வந்தது.

தற்போது வெளியாகியுள்ள சுற்றுலாத்துறை புள்ளிவிவரப்படி இந்திய அளவில் மகாராஷ்டிராவில் உள்ள 'எல்லோரா குகை', ராஜஸ்தானில் உள்ள 'சித்தூர்கர் கோட்டை' ஒடிசாவில் உள்ள 'கொனாரக் சூரியக் கோயில்' ஆகியவற்றை அடித்து பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாட்டின் 'மகாபலிபுரம்' முன்னுக்கு வந்துள்ளது.

கொரோரா காலத்தில் வளர்ந்த தமிழ்நாடு:

கொரோரா காலத்தில் வளர்ந்த தமிழ்நாடு:

கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறைதான் அதிகம் முடங்கியது. விமானச் சேவைகள் நிறுத்தப்பட்ட பின் உலகளவில் சுற்றுலாவை நம்பி உள்ள நாடுகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன.

ஆனால், இந்தப் பெருந்தொற்று பரவல் நேரத்தில் உலகமே வெளிநாட்டுப் பயணிகளை தங்களின் நாட்டிற்குள் அனுமதிக்கலாமா? வேண்டாமா? என அஞ்சிக் கொண்டிருந்தபோது 'சர்வதேச சென்னை ஒலிம்பியாட் 2022' போட்டியை நடத்தி, விளையாட்டுத்துறை மூலமாகத் தமிழக சுற்றுலாத் துறைக்கு புதிய உயிரை ஏற்படுத்திக் கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2021- 2022 நிதியாண்டில் மட்டும் பட்ஜெட்டில், சுற்றுலா மற்றும் கலாச்சார துறைக்கு ரூ.246.06 கோடியைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இதில் சுற்றுலாத்துறைக்கு மட்டும் ரூ.187.59 கோடி வழங்கியது.

உலகமே சுற்றுலாத்துறையை இழுத்து மூடிய நேரத்தில் இந்தத் தொகையை ஒதுக்கியது சிறப்பான விஷயம் எனக் கூறப்பட்டது.

ஆனால், அதிக பார்வையாளர்களைக் கடந்த ஆண்டு ஈர்த்து உலகையே திரும்பிப் பார் வைத்த மகாபலிபுரத்தை ஒன்றிய அரசு வழக்கம்போல இந்த பட்ஜெட்டில் வஞ்சித்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தாண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டைவிட அதிக நிதியை மகாராஷ்டிராவுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த ஆண்டு ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டில், சுற்றுலாத் துறைக்காக 2,400 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது, இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1,343 கோடி ரூபாய் அதிகம்.

ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 'தேகோ அப்னா தேஷ்' (காணுங்கள் எங்கள் தேசத்தை) திட்டத்தின் கீழ், உள்நாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 50 இடங்கள் தேர்வாகி உள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சில விளக்கங்களை ஒன்றிய அரசு அளித்துள்ளதன் மூலம் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) சார்பாக நிர்வகிக்கப்படும் நினைவுச்சின்னங்களில் பெரும்பாலானவை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில்தான் அதிகம் உள்ளன. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 3,696 நினைவுச் சின்னங்கள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 20% க்கும் அதிகமான சின்னங்கள் உள்ளன.

காணாமல் போன 92 நினைவுச்சின்னங்கள்:

காணாமல் போன 92 நினைவுச்சின்னங்கள்:

கடந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும் 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங் களை 'காணவில்லை' என்று ஒன்றிய அரசு அளித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இவற்றில் இதுவரை 68 சின்னங்களை ஏஎஸ்ஐ கண்டு பிடித்துள்ளது. 10 மாநிலங்களில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத 24 நினைவுச் சின்னங்கள் பரவலாக உள்ளன.

அதாவது உ.பி.யில் மட்டுமே 11 சின்னங்கள். ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு நினைவுச் சின்னங்களைக் காணவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் தரவுப் படி உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் 24 கலாச்சார பாரம்பரிய தளங்கள் இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் பரவி உள்ளன. கொரோனா தொற்று காலங்களில் இந்தத் தளங்களுக்கு அதிகமாகச் சுற்றுலாவாசிகள் வருகை தராததால், வருவாய் இழப்பு ஏற்றுப்பட்டுள்ளது. '

ஆனாலும் இவை மீண்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த 2022-23 முதல் பாதி நிதியாண்டில், சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 88 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதே 2019-20 நிதியாண்டு முழுவதிலும் 2.5 கோடி பார்வையாளர்கள் என்ற அளவைவிடக் குறைவாகப் பதிவாகியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது சுமார் 1. 25 கோடி என்ற அளவிலிருந்தது.

தொற்றுநோய் பரவல் இருந்தபோதிலும், 2020-21 நிதியாண்டைத் தவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தத் தளங்களின் வருவாயானது செலவினங்களைக் காட்டிலும் உயர்ந்துள்ளது.

இந்தியாவிலுள்ள மொத்த உலகப் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் இந்த ஆண்டு 212 கோடியை ஒதுக்கியுள்ளது.

சிறந்த நிதி பெறும் மகாராஷ்டிரா & டெல்லி :

சிறந்த நிதி பெறும் மகாராஷ்டிரா & டெல்லி :

மகாராஷ்டிராவிலுள்ள அஜந்தா,எல்லோரா மற்றும் எலிபெண்டா குகைகள் ஆகியவை 32.5 கோடி நிதியுதவியை இந்த நிதியாண்டில் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து டெல்லியின் செங்கோட்டை, குதுப் மினார் மற்றும் ஹுமாயூனின் கல்லறை 30 கோடியைப் பெறுகின்றன., உ.பிக்கு 20 கோடி நிதி கிடைத்தது.

பல மாநிலங்களிலுள்ள நினைவுச்சின்னங்கள் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒட்டுமொத்தமாக இந்தியளவில் நான்கு மாநிலங்களில் மட்டுமே நிறைந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 743, கர்நாடகாவில் 506, தமிழ்நாட்டில் 412, மத்தியப் பிரதேசத்தில் 191 என இவற்றின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளன.

அதாவது உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அதற்கடுத்து வருவதுதான் மத்தியப் பிரதேசம். சொல்லப்போனால் இப்பட்டியலில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆனால் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒன்றிய அரசு இந்தியாவிலுள்ள உலக பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதற்கான மாநில வாரியாக நிதியை ஒதுக்கியதில் பெரிய பாரபட்சத்தைக் கடைப்பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டுக்கு சுமார் 18 கோடியை ஒதுக்கிவிட்டு, கடைசி இடத்திலுள்ள மகாராஷ்டிராவுக்கு 32.5 கோடியை ஒதுக்கி உள்ளது அம்பலமாகியுள்ளது.

தாஜ்மஹாலைப் புறக்கணிக்கிறதா ஒன்றிய அரசு:

தாஜ்மஹாலைப் புறக்கணிக்கிறதா ஒன்றிய அரசு:

அதாவது இந்தியளவில் 2022- 23க்கான நிதி ஆண்டில்( செப்டம்பர் 2022வரை) உலக அளவில் பார்வையாளர்களை இழுத்த பாரம்பரிய தளமாக தாஜ்மஹால் உள்ளது. அதாவது 19,94,408 பார்வையாளர்கள் இங்கே இந்த இடைப்பட்ட காலத்தில் குவிந்துள்ளனர். வருமானமாக 20.6 கோடியை தாஜ்மஹால் ஈட்டி உள்ளது.

ஆனால் இதே நிதியாண்டில் மகாராஷ்டிராவிலுள்ள எல்லோரா குகைகளைப் பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கை 5,52,662 மட்டும்தான். வருமானமோ 2.3 கோடி. இது மிகக் குறைவு.

அதிகம் பார்வையாளர்கள் வந்து குவிந்த தாஜ்மஹாலைப் புறந்தள்ளிவிட்டு, மகாராஷ்டிராவில் உள்ள எல்லோரா குகைக்கு அதிக நிதியை ஒன்றிய அரசு அளிக்க முன்வந்திருப்பதன் மூலம், அதன் இந்துத்துவ கொள்ளையை மறைமுகமாக வளர்க்க முற்படுகிறது என சில எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சித்து வருகின்றன.

இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள மகாபலிபுரம் இதே நிதியாண்டில் 6,63,385 பார்வையாளர்களைக் கொண்டு இந்திய அளவில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 5வது இடத்தைப் பெற்ற தமிழ்நாட்டிற்கு 2023-24 நிதியாண்டில் ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 18 கோடி.

இந்திய அளவில் 7வது இடத்தைப் பிடித்துள்ள மகாராஷ்டிராவுக்கு ஒதுக்கியுள்ள தொகையோ 32.5 கோடி.

முன்பு கூறிய நிதியாண்டில் ஒடிசாவிலுள்ள கொனாரக் சூரியக் கோயிலுக்கு 6,55,629 பேர் வந்துள்ளனர். 2.6 கோடியை வருவாயாக இது பெற்றுள்ளது. தமிழ்நாட்டை அடுத்து 6வது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு ஒன்றிய அரசு இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? 13 கோடி.

கர்நாடகா மீது ஒன்றிய அரசு அதிக பாசம் :

கர்நாடகா மீது ஒன்றிய அரசு அதிக பாசம் :

தமிழ்நாட்டில் உலகப் பாரம்பரிய தளங்களின் மொத்தம் இரண்டு உள்ளன. மகாராஷ்டிராவில் மூன்று. தமிழ்நாட்டைவிட ஒன்றுதான் அதிகம். அதற்கு 32.5 கோடி. தமிழ்நாட்டிற்கு 18 கோடி. ஏறக்குறைய 14.5 கோடி அதிகம். இந்த ஏற்றத்தாழ்வு சரியானதா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள்.

இதைவிட இன்னொரு அநியாயம் தெரியுமா? 2022-23 நிதியாண்டில் அதிக வருவாய் பெற்ற இடங்களில் 1, உத்திரப் பிரதேசத்தில் உள்ள தாஜ்மஹால் 20.6 கோடியையும் 2, டெல்லி செங்கோட்டை 6.1 கோடியையும் மீண்டும் 3, உ.பியிலுள்ள ஆக்ரா கோட்டை 7.3 கோடியையும், 4, டெல்லியில் உள்ள குதுப் மினார் 4.1கோடியையும், 5 தமிழ்நாடு மகாபலிபுரம் 3.1 கோடியையும் 6, ஒடிசாவிலுள்ள கொனாரக் சூரியக் கோயில் 2.6 கோடியையும் 7, மகாராஷ்டிராவிலுள்ள எல்லோரா 2.3 கோடியையும் 8, ராஜஸ்தானிலுள்ள சித்தூர்கர் கோட்டை 1.5 கோடியையும் வருவாயாக ஈட்டியுள்ளன.

இந்தப் பட்டியலில் கர்நாடகா இல்லவே இல்லை. ஆனால் அது பாஜக ஆளும் மாநிலம் என்பதால் 2023-24 ஆண்டு பட்ஜெட்டில் 18.5 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழ்நாட்டைவிட அதிகமான தொகை எனத் தனியே கூற வேண்டாம்.

ஒன்றிய அரசின் இந்த நிதி பங்கீட்டில் வித்தியாசங்கள், ஒருதலைபட்சமாக இருப்பதோடு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை ஒடுக்குவதாகவும் உள்ளது என்கிறார்கள் பலர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+