உலகின் பழமையான மொழி தமிழ் தான்.. சமஸ்கிருதம் அல்ல.. பாடலாசிரியர் ஜாவேத் அக்தரின் தரமான பதில்!
மும்பை: உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்று ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய திருவிழாவில் இந்தி சினிமாவின் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். உருது மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் எந்த மொழி பழமையானது என்று ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு தமிழுக்கு பின்னரே சமஸ்கிருதம் என்றும் ஜாவேத் அக்தர் பதிலளித்துள்ளார்.
அண்மையில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் இந்தி திணிப்பு விவாதத்தை தொடங்கி வைத்தது. 1960களில் நடந்த மொழிப் போர் விவகாரத்தை மையமாக வைத்து பராசக்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழின் பெருமைகள், உலகின் பழமையான மொழி தமிழ் என்று பலரும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

அதேபோல் இந்தி திணிப்பால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும் விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உருது மொழி கவிஞரும், இந்தி சினிமாவின் பிரபல பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் சிறந்த விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ஜாவேத் அக்தரிடம், உருது அல்லது சமஸ்கிருதம்.. இதில் எது மிகவும் பழமையான மொழி? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜாவேத் அக்தர், என்னிடம் என்ன மாதிரியான கேள்வியை கேட்கிறீர்கள்.. உருது மொழி என்பது சமஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்தது தான். உலகில் பேசப்பட்டு வரும் 2வது பழமையான மொழி சமஸ்கிருதம் தான். ஆனால் உலகில் பேசப்பட்டு வரும் மிகவும் பழமையான மொழி என்றால், அது தமிழ் தான் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, உண்மையில் நீங்கள் உருது அல்லது சமஸ்கிருதம் என்று ஒப்பிட்டு கேட்பதற்கு பதிலாக, லேட்டின் மற்றும் க்ரீக் மொழிகளை கேட்டிருக்க வேண்டும். அதேபோல் உருது மொழி உருவாக்கி இன்னும் ஆயிரம் ஆண்டுகளை கூட கடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஜாவேத் அக்தரின் பேச்சு சோசியல் மீடியாவில் அதிகளவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
உருது கவிஞரும், இந்தி சினிமாவின் பிரபல பாடலாசிரியருமான ஜாவேத் அக்தரின் தமிழ் மொழி தொடர்பான கருத்திற்கும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. பாடலாசிரியராக நீண்ட அனுபவம் கொண்ட ஜாவேத் அக்தர் 5 முறை தேசிய விருதை வென்றுள்ளார். 81 வயதாகும் ஜாவேத் அக்தர், இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளிலும் பாடல்களை எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications