இன்னும் 30 ஆண்டுகளில் தமிழர்களின் DNA-வே அழியும்! எச்சரிக்கும் சுகாதாரத் துறை நிபுணர்
சென்னை: இன்னும் 30 ஆண்டுகள் மதுகுடித்தால் தமிழர்களின் டிஎன்ஏவே அழியும், மதுவை ஒழிப்பதே முழு தீர்வு என பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி அதிர்ச்சியான ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது: 1971 ஆம் ஆண்டு மதுவிலக்கு தமிழகத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை 2 தலைமுறைகளாக தமிழர்கள் மதுவை குடிக்கிறார்கள்.

அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் ஜீனிலும் பாதிப்பு இருக்கிறது. தொடர்ந்து 3ஆவது தலைமுறையும் மதுவை குடித்தால் குழந்தைகள் பிறக்கும் போதே மதுவுக்கு அடிமையாக பிறக்க வாய்ப்பிருக்கிறது.
ஆரோக்கியமாக இருந்த தமிழர்களின் டிஎன்ஏ மாற்றம் அடைந்து பேரிடர் உருவாகும். இன்னும் தொடர்ந்து குடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமே அழிந்துவிடும். மதுவை ஒழிப்பதே முழு தீர்வு என தெரிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 1983 ஆம் ஆண்டு டாஸ்மாக் உருவாக்கப்பட்டு மது விற்பனையை அரசே நேரடியாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
இந்த டாஸ்மாக் மதுவிற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைத்தாலும் இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன. பல குழந்தைகள் தந்தை, தாய் இல்லாமலும் பல மனைவிகள் கணவன்மார்கள் இல்லாமல் விதவையாகவும் இருக்கும் நிலை ஏற்படுகிறது.
குடித்துவிட்டு ஆங்காங்கே குடிமகன்கள் விழுந்து கிடப்பதும், அவ்வழியாக போவோர் வருவோரை கிண்டல் செய்வதும், அசுத்தம் செய்வதும், கட்டிய மனைவிக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதனால்தான் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இருக்கும் கடைகளையும் குடியிருப்புகளுக்கு அருக இருக்கும் கடைகளையும் நீக்குமாறு பெண்கள் பலவகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எல்லாவற்றையும் விட மது போதை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், கொலை, கொள்ளை செய்யவும் உந்துகிறது என்பதால்தான் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது.
மதுபானங்களுக்கு பதிலாக மாற்று வருவாய்களை தேடவும் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தவெக அரசு பொறுப்பேற்று தற்போது 700- க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூடிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மற்ற கடைகளையும் மூடுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது குழந்தைசாமி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
