பரபரப்பு! அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் திடீர் போராட்டம்!
சென்னை: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணிபுரியலாம்.
அதன் பின்னர் அவர்களில் 25% பேரால் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும். ராணுவத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இதை மத்திய அரசு கருதுகிறது.

போராட்டம்
இத்திட்டம் குறித்து நாட்டில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் பீகாரில் தொடங்கிய போராட்டம் பல மாநிலங்களுக்குப் பரவியது. சுமார் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெறும் நிலையில், பல்வேறு இடங்களில் ரயில்களுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், பீகாரில் இணையச் சேவையும் முடக்கப்பட்டது.

சென்னையில் போராட்டம்
வடமாநிலங்களில் தொடங்கிய இந்தப் போராட்டம் இப்போது தென்மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று வரை இது தொடர்பாகப் போராட்டம் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்தச் சூழலில் இன்று காலை அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகச் சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இளைஞர்கள்
இன்று அதிகாலை முதலே போர் நினைவுச் சின்னம் அருகே திரண்ட மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறாமல் உள்ள நிலையில், இப்போது அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது தங்கள் எதிர்காலத்தையே பாதிக்கும் என்று இளைஞர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பேச்சுவார்த்தை
ராணுவத்தில் சேர விண்ணப்பித்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆரணி, கோவை, திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதுகாப்பு
இருப்பினும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களைக் கலைக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் மேலும் இளைஞர்கள் வரக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications