தென் மாநில எம்.பிக்களின் கூட்டு நடவடிக்கை குழு தயார்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கை குழு" அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

Delimitaion mk stalin all party meeting tamil nadu

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த பிப்.25 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்களவை தொகுதி வரையறையால், தமிழகத்தில் உள்ள 39 எம்.பி.க்கள் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும். இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை மார்ச் 5-ம் தேதி நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அரசியலை மறந்து அனைவரும் பங்கேற்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட 45 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்தக் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் அமைச்சர்கள் அழைப்புகளை வழங்கினர்.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறையும் என்ற கருத்தை முழுமையாக மறுத்ததுடன், தொகுதிகள் குறையாது என்று தெரிவித்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இதனை ஏற்கவில்லை. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லாத ஒன்று என கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

அவரை தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் பங்கேற்கவில்லை என்று அறிவித்துவிட்டார். நாம் தமிழர் கட்சியும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. அதேசமயம் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்க உள்ளதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதவிர, பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்கின்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிகளின் தலைவர்கள் கௌரவம் பார்க்காமல் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, விஜய்யின் தவெக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. மநீம சார்பில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது. 57 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கை குழு" அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் - அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கருத்தினை முன் வைத்துள்ளனர். முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கை குழு"வை விசிக வரவேற்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக்கூட்டத்தில், 63 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில் 58 கட்சிகள் பங்கேற்பு. பாஜக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+