தமிழகத்தில் அவசர கதியில் லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறதா? தமிழக தேர்தல் ஆணையர் விளக்கம்
சென்னை: தமிழகத்திற்கு அவசர கதியில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு அவசர கதியில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் வாக்கு எண்ணிக்கை தேதி ஜூன் 4 என மிகவும் அதிக நாட்கள் இருப்பதாலும் தமிழகத்திற்கு மோடி அதிக முறை வந்துள்ளதாகவும் அவருடைய பிரச்சாரத்திற்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்யும் நாள் மார்ச் 20 முதல் தொடங்குகிறது. முடியும் நாள் மார்ச் 27 ஆகும். அது போல் வேட்புமனுக்களை பரிசீலனை செய்ய மார்ச் 28 ஆம் தேதியும் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 30 ஆம் தேதி ஆகும்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இது குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது.
85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து வாக்களிக்கலாம். இதற்கு விரும்புபவர்கள் மனு அளிக்கலாம். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார். திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று முதலில் தவறாக இடம் பெற்று விட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் உள்ளது.
ரமலான் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம், அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்பவர்கள் வாக்கு சேகரிக்கக் கூடாது. விளவங்கோடு சட்டசபைக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும். திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை.
வாக்குப் பதிவுக்கு 7 நாட்களுக்கு முன்பு பூத் சிலிப் கொடுக்கப்படும். முதல்வர் அலுவலகம், அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருக்கும் சூழல்களை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களிடம் ஆலோசனை பெற்றே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம். இதற்காக 11 அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம். இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications