அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு.. மாநில அரசுக்கு ரத்த சோகை.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: அளவுக்கு மீறிய அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுவதாக கூறிய ஸ்டாலின், பல்வேறு நெருக்கடிகளை மீறி தமிழ்நாட்டை உயர்த்தி வருவதாக கூறியுள்ளார்.
மத்திய, மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில், மாநில சுயாட்சி குறித்த முதல் தேசிய கருத்தரங்கை தமிழக அரசு சார்பாக தொடங்கி வைப்பது எனக்கு மகிழ்ச்சி. பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணுக்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது.

தமிழ்நாடு சமூக நீதியை எடுத்து சொல்லுகிற மண். தமிழ்நாட்டின் அரசியல் சமூகநீதியை பின்பற்றியே உள்ளது. இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து எழுப்பிய இந்தி ஆதிக்க வெறுப்புக்கு எதிரான குரல் இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் எதிரொலித்து வருகின்றன.
கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருமொழி கொள்கையை ஆதரித்து மக்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள். அதேபோல் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு சட்டக் குறுக்கீடுகள், நிர்வாக குறுக்கீடுகள் என்று தொடர்ந்து தொல்லை தரும் வகையில், பல தடைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும், மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய நியாயமான நிதி பங்கீட்டையும் மறுக்கிறது. பெண்ணுரிமை, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருக்கிறது. மத்திய அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் உரிய நிதி பங்கை அளிக்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. பல்வேறு நெருக்கடிகளை மீறி போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம். இந்தியாவில் அதிகார குவிப்பு நடைபெறுவதை தடுக்க வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. அளவிற்கு மீறிய அதிகார குவியல்களாக மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது. அனைத்து தடைகளையும் மீறி தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்.. என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications