பிர்சா முண்டா பிறந்த நாள்.. பிரதமர் மோடியின் சூப்பர் அறிவிப்பு.. நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை: பிர்சா முண்டா பிறந்த நாளைப் 'பழங்குடியினர் பெருமை தினமாக' அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நன்றி தெரிவித்தார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து நமது இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தரப் பலரும் போராடினர். காந்தி அகிம்சை வழியில் போராடினார் என்றால் பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் ஆயுதம் ஏந்தி போராடினர்.
அப்படி தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில் முக்கியமானவர் பிர்சா முண்டா. பழங்குடி மக்களைப் பண்ணையார்களுக்கும் முதலாளிகளுக்கும் சுரண்டுவதைக் கண்டு கொதித்தெழுந்தார்,

பிர்சா முண்டா
தற்போது பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர் பிர்சா முண்டா. இவரது புகழைச் சொல்லும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்னும் கூட ஜார்கண்ட் பகுதி பழங்குடி மக்களிடையே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தில் உள்ளது.

பழங்குடியினர் பெருமை தினம்
இந்நிலையில், பிர்சா முண்டாவின் நினைவாக ராஞ்சியில் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, பழங்குடியின புரட்சியாளர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் பெருமை தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பைப் பலரும் வரவேற்று வரும் நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு அளப்பரியது. அவர்கள் நாடு முழுவதும் தத்தம் பகுதிகளில் ஆங்கிலேயர்களை முழு வலிமையுடன் எதிர்த்துப் போராடினர். மேலும் அத்தகைய போராட்டங்களின்போது அவர்களில் எண்ணற்றோர் ஆற்றொணாத் துயரங்களை அடைந்ததுடன், ஆங்கிலேயர் கைகளால் மாண்டும் போயினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் தலைவராக பக்வன் பிர்சா முண்டா விளங்கினார். அவர் துணிவு மிக்கவராகவும் மக்கள் போற்றும் தலைவராகவும் திகழ்ந்தார். தன் இளம் வயதிலேயே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு அவர் வீரமரணம் அடைந்தார்.

பிரதமருக்கு நன்றி
பக்வன் பிர்சா முண்டா நம் நாட்டு விடுதலைக்காக, வீரத்துடன் போரிட்டு, அளப்பரிய பங்காற்றி மையைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15ஆம் நாளை 'பழங்குடியினரின் பெருமை தினமாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நன்றி தெரிவித்தார். இந்நன்னாளில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பொதுவாக இந்தியப் பழங்குடியின மக்களுக்கும், குறிப்பாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கும் அவர்கள் செய்த எண்ணற்ற தியாகங்களுக்கு நன்றி தெரிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய மறுமலர்ச்சியில் பழங்குடியின மக்களும் ஏனையோருக்கு இணையான பங்குதாரர்களே என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பழங்குடியின மக்களின் அனைத்து வகையிலுமான வளர்ச்சிக்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பூண்டுள்ள உறுதிமொழியை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications