அசுர வேகத்தில் அடித்து தூக்கிய லாரி! தென்காசி விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு நிதியுதவி
சென்னை: தென்காசி அருகே நடந்த கொடூர விபத்தில் 6 பேர் பலியான நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மோசமான சாலை விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட தொப்பூர் கணவாயில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே மற்றொரு மோசமான விபத்து அரங்கேறியது. லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரத்தில் சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. தென்காசி சாலையில் கார் அதிவேகமாக வந்த நிலையில், எதிர்புறம் வந்த லாரி அதில் மோதியதே விபத்திற்குக் காரணமாக அமைந்தது. இந்த விபத்தில் கார்த்திக், வேல், மனோஜ் சுப்பிரமணியன், மனோகரன், போத்திராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சாலை விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவரை அக்கம் பக்கத்தினர் உயிருடன் மீட்டனர். இருப்பினும், அவருக்கும் சிகிச்சை பலனில்லாமல் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம் மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 28ஆம் தேதி அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமம். பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த போத்திராஜ் (வயது 32) த/பெ. மூக்கையா கோனார், வேல்மனோஜ் (வயது 30) த/பெ.கோபால், சுப்பிரமணியன் (வயது 29) த/பெ.பரமசிவன், கார்த்திக் (24) த/பெ.பட்டமுத்து, முத்தமிழ்செல்வன் (வயது 23) த/பெ.ராமமூர்த்தி, மனோ (வயது 19) த/பெ.மாரிச்சாமி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications