ஒப்பந்ததாரர்களுக்கு செம்ம செக்.. பொதுப்பணித்துறை எடுத்த மிகப்பெரிய முடிவு.. தமிழக அரசு அதிரடி
சென்னை: ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் அரசு பணிகள் ஒப்பந்தம் விடப்படுகின்றன. இதன்படி ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளில் குறைபாடுகள் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு பொதுப்பணித்துறை அறிவித்திருக்கிறது. இதேபோல் ஒப்பந்த நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல், கமிஷன் என அதிகம் குற்றச்சாட்டப்படும் விவகாரம் எது என்றால் அது பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அரசு துறை கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் தான். இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் அரசு ஒப்பந்தங்கள் விவகாரம் விமர்சனங்கள் இல்லை.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை, வருவாய், வணிகவரி, பதிவு, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளவது பொதுப்பணித்துறை தான். பொதுப்பணித்துறை அறிவிக்கும் ஒப்பப்பந்த பணிகள் பகிரங்க ஏலம் விடப்படுகிறது. யார் குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தங்கள் தரப்படுகிறது .

பராமரிப்பு பணி
ஒப்பந்ததாரர்கள், சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள், மருத்துவமனைகளில் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள் இதற்காக, பொதுப்பணித்துறை ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்குகிறது.

அதிகாரி
ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் நடக்கும் கட்டுமான பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் யாரிடம் புகார் அளிப்பது என்பது தெரியாத நிலையே உள்ளது. அவ்வாறு புகார் அளித்தால் கூட அதிகாரிகள் சிலர் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சில இடங்களில் தரக்குறைவான கட்டுமான பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக விசாரிக்க நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நடவடிக்கை
www.tnpwd.comஎன்கிற இணையதளம் வாயிலாக இந்த நோடல் அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் அளிக்க பொதுப்பணித்துறை வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. அதில், புகார் அளிப்பவர் பெயர், அவரது மின்னஞ்சல் முகவரி, தொலை பேசி எண், புகார் குறித்த விவரங்களை கூற வேண்டும். இந்த புகார்கள் மீது நோடல் அதிகாரி உரிய விசாரணை நடத்துவார். விசாரணையில் கட்டுமான பணியில் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் . பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதுதான் பொதுப்பணித்துறை செய்துள்ள புதிய நடைமுறையாகும்.

டெண்டர்
இன்னொரு நல்ல விஷயத்தையும் பொதுப்பணித்துறை செய்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்த நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. தற்போது வரை பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு அரசு துறை கட்டிட பணிகளை டெண்டர் எடுக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படாது.

யார் எடுத்தது
ஆனால், இனி வருங்காலங்களில் டெண்டர் எடுத்த நிறுவனங்கள், டெண்டர் எடுத்த மதிப்பு, ஒப்பந்த காலம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஒப்பந்தம் யார் எடுத்தார்கள், எவ்வளவு கோடிக்கு வேலை எடுத்துள்ளார். வேலைக்கான கால அளவு எவ்வளவு, வேலை தரமாக நடக்கிறதா, அப்படி இல்லையெனில் அந்த நிறுவனம் பெயரை குறிப்பிட்டு புகார் தெரிவிக்க முடியும்.












Click it and Unblock the Notifications