பெரும் போராட்டம்-சென்னையில் அதிமுக பிரமுகரிடம் ரூ1,000 கோடி மதிப்பு 115 கிரவுண்ட் அரசு நிலம் மீட்பு!
சென்னை: சென்னையில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக் கலை துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. தோட்டக்கலை சங்கம் என்ற பெயரில் சிலர் இந்த நிலத்தை குத்தகைக்கு பெற்று பயன்படுத்தி வந்தனர். தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகர், தோட்டக்கலை நிலத்தை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் 1989-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அப்போது முதலே தமிழ்நாடு அரசு தரப்பில் இந்நிலத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒருபகுதியாக 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில், 20 ஏக்கர் நிலம் முதலில் மீட்கப்பட்டது. இந்த நிலத்தில்தான் செம்மொழிப் பூங்காவும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குகளும் நடைபெற்றன, இதனால் இந்த விவகாரம் இழுபறியாக நீடித்துக் கொண்டே இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றமானது, தோட்டக் கலை துறைக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது. மேலும் தோட்டக் கலை துறை நிலத்தை மீட்கவும் அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ரூ1,000 கோடி மதிப்பிலான 110 கிரவுண்ட் நிலத்தை நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். நீண்டகாலமாக நடைபெற்ற சட்டப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications