சுட்டெரிக்கும் வெயில்.. ஏசி பேருந்துகளை நான்-ஏசி பேருந்துகளாக மாற்றும் தமிழக அரசு.. ஏன் என்னாச்சு?
சென்னை: கோடைக்காலம்னு வந்துட்டாவே ஏசி இல்லாத வீடுகளில் ஏசிகளை வாங்கி மாட்டுவார்கள். இதுதான் உலக வழக்கம். இதே ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களில் வாழும் மக்கள் எந்த காலமாக இருந்தாலும் ஹீட்டரை வாங்கி பொருத்துவார்கள்.
இந்த விதி பேருந்துகளுக்கும் பொருந்தும்தானே! கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் மண்டையை பிளக்கிறது.
இதனால் இரு சக்கர வாகனங்களில் மட்டுமல்ல, ஏசி உள்ள கார்களில் சென்றாலும் கூலிங் போதவில்லை என்ற குறை இருக்கிறது. மக்கள் சொகுசாக சென்று வர சொகுசு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் சில பஸ்களுக்கு மட்டும் ஏசி வசதி உள்ளது. கோடை வெயிலை சமாளிக்க எல்லா பேருந்துகளிலும் ஏசி போட்டால் நன்றாக இருக்குமே என நாம் நினைக்கிறோம். ஆனால் விதி பாருங்கள் வேறொன்றாக இருக்கிறது. சுளீரென அடிக்கும் வெயிலில் ஏசி இல்லாத பேருந்துகளுக்கு ஏசியை போடுவதற்கு பதிலாக ஏற்கெனவே ஏசி இருக்கும் பேருந்துகளில் இருந்து ஏசிக்களை நீக்கும் பணியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
ஆம்! நீங்கள் தவறாக படித்துவிடவில்லை. சரியாகத்தான் படித்துள்ளீர்கள். அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளை காட்டிலும் சென்னை டூ திருச்சிக்கு இயக்கப்படும் ஏசி பேருந்துகளில் ரூ 20 முதல் 40 வரை குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏசி இயந்திரங்களை பராமரிக்கும் கட்டணம் என்பது பட்ஜெட்டில் துண்டு விழும் அளவுக்கு செலவை இழுத்து போடுகிறது. இதனால் கோடை காலமாக இருந்தாலும் பரவாயில்லை என கருதிய தமிழ்நாடு போக்குவரத்து கழகம், பேருந்துகளில் உள்ள ஏசிக்களை நீக்கி வருகிறது.
அது போல் கண்ணாடிகளையும் நீக்கிவருகிறது. கடந்த ஆண்டு மாநில விரைவு போக்குவரத்து கழகமும் மற்றொரு மாநில போக்குவரத்து கழகமும் இணைந்து இயக்கும் தொலைதூர பேருந்துகளில் ஏசிகளை நீக்கிவிட்டு ஏசி இல்லாத பேருந்துகளாக மாற்றின. தற்போது கும்பகோணம் விரைவு பேருந்துகளில் இது போன்ற ஏசிகளை நீக்கும் பணிகள் நடக்கின்றன.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் பேருந்துகளில் கூலிங் போதவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள். சில பேருந்துகளில் அவ்வப்போது ஏசி பழுதடைகிறது. இதனால் ஏசியும் இல்லாமல் ஜன்னலும் இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலை ஏற்படுகிறது. ஏசிகளை பராமரிக்க அதிக கட்டணங்களை செலுத்த நேரிடுகிறது. இதனால் பேருந்துகள் இயக்கப்படாமல் சும்மாவே நிறுத்தப்படுகிறது.
இதை போக்கும்விதமாகவே ஏசிகளை நீக்கி வருகிறோம். கும்பகோணம் போக்குவரத்தில் 10 க்கு ஒரு பேருந்து சும்மாவே நிற்கிறது. இவற்றை இயக்கவே ஏசிகளை நீக்கி வருகிறோம் என்றனர். ஏசி இல்லாத பேருந்துகளுக்கு ஏசி போடுவார்கள் என பார்த்தால் இருக்கும் ஏசிகளையும் நீக்கி வருகிறார்களே என பயணிகள் வேதனை அடைகிறார்கள்.












Click it and Unblock the Notifications