'தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்.. அதில் எந்த தவறும் இல்லை..' அமைச்சர் மா.சு பேச்சு
சென்னை: நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றும் நீட் தேர்வு விலக்கு பெறும்வரை அரசு சார்பில் மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆம் அலை பாதிப்பு உச்சமடைந்தது. இதையடுத்து +2 தேர்வுகள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டன.

செப்டம்பர் 12இல் நீட் தேர்வு
மாணவர்களுக்கு 10 மற்றும் 11ஆம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் நீட் தேர்வு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் அப்போது வெளியாகவில்லை. இந்நிலையில், வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

பாஜக வழக்கு
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாகத் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், "நீட் தேர்வு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த கரு நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாடு அரசின் முடிவு
இந்த வழக்கைப் பொறுத்தே நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாடு அரசின் கொள்கை. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனுப்பிய தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

நடவடிக்கை எடுக்கிறோம்
கடந்த 2006ஆம் ஆண்டும் நுழைவுத் தேர்வு இருந்தது. அப்போது நீதிபதி ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. நீட் தேர்வு நடைபெறக் கூடாது என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

தயாராக வேண்டும்
தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும். நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தப்பில்லை. நீட் தேர்வு விலக்கு பெறும்வரை தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் மாணவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications