"பிங்க்" பஸ்கள்! மகளிர் இலவச பேருந்தில் அதிரடி மாற்றம்! நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும் மாஸ் திட்டம்
சென்னை: பெண்களுக்கு இலவச பேருந்துகள் திட்டத்தில் தமிழக அரசு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை உடன் வென்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அமைத்தது.
ஆட்சி அமைத்த உடன் முதல்வர் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில் குறிப்பாகச் சாதாரண பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இலவச பயணம்
இந்தத் திட்டத்திற்குப் பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் உழைக்கும் பெண்கள், தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தைப் போக்குவரத்திற்கே ஒதுக்க வேண்டிய சூழல் இருந்தது. இந்த இலவச பேருந்து திட்டம் மூலம் கணிசமான தொகை மிச்சம் செய்ய முடிவதாகப் பெண்கள் தெரிவித்தனர். நடப்பு ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக மட்டும் தமிழக அரசு 1600 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

அடையாளம் காண்பதில் சிக்கல்
மாநகராட்சிகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் மட்டுமே இந்த இலவச அறிவிப்பு பொருந்தும். இருப்பினும், சாதாரண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதால், பல சமயங்களில் பெண்கள் எக்ஸ்பிரஸ் அல்லது சொகுசு பேருந்துகளில் ஏறிவிடுகின்றனர். இதனால் வேறு வழியின்றி டிக்கெட் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பிங்க் நிறம்
சாதாரண பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி பிங்க் நிற பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சேப்பாக்கம் சட்டசபை உறுப்பினர் உதயநிதி தொடங்கி வைத்தார். இருப்பினும், பேருந்துகளுக்கு முழுவதுமாக பிங்க் நிறம் அடிக்கப்படவில்லை. மாறாக முன் பக்கமும் பின் பக்கமும் மட்டுமே பிங்க் நிறம் அடிக்கப்பட்டு இருந்தது.

எளிதில் அடையாளம்
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக, நிதிப் பற்றாக்குறை காரணமாகவே இப்படி முன் பக்கமும் பின் பக்கமும் மட்டுமே பிங்க் நிறம் அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது இணையதளங்களில் கடும் கிண்டலுக்கு ஆளானது. மேலும், சாதாரண பேருந்துகளை எளிதில் அடையாளம் காணவே பிங்க் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பக்கவாட்டில் இருந்து பார்ப்போருக்கு இதை எளிதில் அடையாளம் காண முடியாத சூழலே இருப்பதாகக் கூறப்பட்டது.

நிதி திரட்ட முடிவு
இந்தச் சூழலில் பேருந்துகளுக்கு முழுவதுமாக பிங்க் நிறம் அடிக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக சில பேருந்துகளுக்கு பிங்க் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. படிப்படியாகச் சென்னையில் இருக்கும் அனைத்து சாதாரண பேருந்துகளுக்கும் பிங்க் நிறம் அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கப் பேருந்துகளின் பின்புறம் மாதம் ரூ.10 ஆயிரம் செலுத்தி விளம்பரப்படுத்தும் திட்டத்தையும் கொண்டு வர உள்ளது.












Click it and Unblock the Notifications