செம்பரம்பாக்கம் ஏரி குறித்த அச்சம் தேவையற்றது.. என் வார்த்தைகளை நம்புங்கள்.. வெதர்மேன் நம்பிக்கை
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தாலும் கடந்த முறை போல் இந்த முறையும் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் தேவையற்றது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. அது போல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 24 அடியாகும். இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்ப வாய்ப்புண்டு. இதனால் சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை
கடந்த 2015-ஆம் ஆண்டு குறைந்த நேரத்தில் பெய்த அதிக மழையால் ஏரி உடைந்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. 5 ஆண்டுகள் ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது மக்கள் இதை நினைக்காத நாளில்லை.

வெள்ளம்
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், செம்பரம்பாக்கம் ஏரி குறித்த அச்சங்கள் தேவையற்றவை. இன்னும் இரு தினங்களில் இந்த ஏரி நிரம்பினாலும் நிரம்பும். ஆனால் இப்போது வரை வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் வேண்டாம்.

அடையாறு
கடந்த வடகிழக்கு பருவமழை காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதையும் அதிலிருந்து தானாக தண்ணீர் வெளியேறுவதையும் கண்டுள்ளோம். அடையாறு ஆற்றிலும் தண்ணீர் நிரம்பும். ஆனால் அதிகபட்ச வெள்ள அளவுக்கு கீழ் பாயும். இந்த அளவில் பாதிப்பு ஏற்பட்டால்தான் நாம் வெள்ளம் குறித்து அச்சப்பட வேண்டும்.

பிரதீப் ஜான்
நீங்கள் என் வார்த்தைகளை நம்பலாம். 2015-ஆம் ஆண்டு இரவு ஏரி உடைப்பு ஏற்பட்டதை நான் அறிவேன். அதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் சென்னை பெருவெள்ளத்துடன் ஒப்பிடக் கூடாது. எனவே நிம்மதியாக இருங்கள். இந்த மழை எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாது என பிரதீப் ஜான் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
