'சீருடை எங்களை அடையாளப்படுத்தும்'.. டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவித்த சீருடையை டாஸ்மாக் கடை ஊழியர்கள் அணிய மறுக்கின்றனர். சீருடை தங்களைச் சமூகத்தில் தனித்துக் காட்டும்.. தங்களை மதுக்கடைக்காரர்களாக அது அடையாளப்படுத்தும் எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.வசூல் பணத்தை எடுத்துச் செல்லும்போது வழிப்பறிக்கு வழிவகுக்கும் என்றும் அச்சம் தெரிவித்தள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் 6,473 மேற்பார்வையாளர்கள், 14,379 விற்பனையாளர்கள், 2,025 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 877 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவதாக எழுந்த புகாரை மனிதாபிமானத்துடன் அணுகிய அரசு, அவர்களுக்கு சம்பளத்தை கணிசமாக உயர்த்தியது. இப்போது அவர்களின் ஊதியம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாறி உள்ளது. எனினும் இன்றும் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனை ஓயவில்லை.இதையடுத்து பசுமை வரியை பாட்டில் எம்ஆர்பியுடன் சேர்த்து அதற்கு மேல் இனி வசூலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல் யுபிஐ பரிவர்த்தனைகளையும் நாளை முதல் கட்டாயமாக்கி உள்ளது

அதேபோல் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்று த.வெ.க. தலைமையிலான அரசு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி, மேற்பார்வையாளர்கள் இளநீல நிறச்சட்டையும், கடற்படை நீலநிற பேண்ட்டும், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் இளம் பழுப்பு நிறச்சட்டையும், கரும்சாம்பல் நிற பேண்ட்டும் அணிய வேண்டும் என்றும், சட்டையில் இடது பக்கத்தில் டாஸ்மாக் இலச்சினை (லோகோ) இடம்பெற வேண்டும் என்றும் அறிவித்து இருந்தது.
இதற்காக துணி வாங்குவதற்கும், தையல் பணிகளுக்கும் ஒரு செட் சீருடைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 செட்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு கூறியிருந்தது. அதன்படி, ஒவ்வொரு ஊழியர்களின் வங்கி கணக்கிலும் ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுவிட்டது.
ஹைதராபாத் சொகுசு பண்ணை வீட்டில் கஞ்சா, மதுவுடன் விருந்து.. 108 மாணவ, மாணவிகள் சிக்கினார்கள்
சீருடைக்கான துணியை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாங்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை சீருடைக்கான துணி எதுவும் வரவில்லை என்றே டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படி வந்தாலும் நாங்கள் அதை வாங்கப்போவது இல்லை என்றும் அந்த சீருடை சமூகத்தில் எங்களை மதுக்கடைக்காரர்களாக அடையாளப்படுத்தும் என்றும், எனவே நாங்கள் அந்த சீருடையை அணியப்போவது இல்லை என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் எவ்வளவோ மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும் நிலையில், சீருடை என்பது மிக அவசியமா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர், ஏற்கனவே டாஸ்மாக் கடை ஊழியர்கள் வசூலை வங்கிகளில் செலுத்த செல்லும் வழியில் வழிப்பறி செய்யும் நிகழ்வுகள் அரங்கேறி வரும் சூழலில், இப்போது சீருடை அணிந்து சென்றால், நிச்சயம் எங்களை எளிதில் அடையாளம் கண்டு வழிப்பறி செய்ய கொள்ளைக்காரர்களுக்கு இன்னும் வசதியாகிவிடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே டாஸ்மாக் பணியாளர்கள் சீருடையை வருகிற 15-ந்தேதியில் இருந்து கட்டாயமாக அணியவேண்டும் என்றும், சீருடைப் படி பெற்ற பிறகும் பணி நேரத்தில் சீருடை அணியாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழங்கப்பட்ட ஆறாயிரம் ரூபாய் தொகை திரும்பப் பெறப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
