வீட்டு வாடகை விவகாரம்.. பலருக்கும் வருமான வரித்துறையில் இருந்து பறந்த நோட்டீஸ்
சென்னை: மாதத்திற்கு ₹50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வாடகையாக வீடு அல்லது நிலத்தின் உரிமையாளருக்கு வாடகைதார்கள் செலுத்தும்போது, வீடு அல்லது நில உரிமையாளருக்கு வாடகைதாரர் 2 சதவீதம் டிடிஎஸ் பிடிக்க வேண்டும்.. அப்படி டிடிஎஸ் பிடித்த தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். அப்படி டிடிஎஸ் பிடித்து செலுத்தாதவர்களுக்கு வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வரி நிபுணர்கள் தெரிவித்தனர்.
மாதத்துக்கு 50,000 ரூபாய்க்கு மேல் வாடகை செலுத்தும் போது, TDS கழிக்கப்படும், ஆனால் 2024 பட்ஜெட்டில், TDS விகிதம் 5% லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டிருந்தது. இதன்படி மாத வாடகை 50000 அல்லது அதற்கு மேல் உள்ள தொகை வசூலிக்கும் போது 2 சதவீதம் தொகையை வீட்டின் உரிமையாளருக்கு செலுத்தும்போது, டிடிஎஸ் பிடித்து அதனை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். 50000 ரூபாயில் 2 சதவீதம் டிடிஎஸ் தொகை என்பது 1000 ரூபாய் ஆகும். 12 மாதங்களுக்கு கணக்கு பார்க்கும்போது, கிட்டத்தட்ட 12000 ரூபாய் டிடிஎஸ் தொகையாக பிடிக்கப்பட வேண்டும்.. இதுவே தற்போது உள்ள நடைமுறையாகும்.

வருமான வரி சட்டம் 1961இன் பிரிவு 194IB -இன் கீழ் இந்த விதிமுறையானது அமலில் உள்ளது. இதன்படி வாடகைதாரர் டிடிஎஸ் தொகையை நிதியாண்டின் இறுதியில் அல்லது மாதாந்திர வாடகை செலுத்தும் நாளுக்கு முன்பு அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் காலாவதி ஆவதற்கு முன்பு என இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தருணத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
இப்படி பிடிக்கப்படும் டிடிஎஸ் தொகை வருமான வரி கணக்கில் காட்டப்படும். அதாவது வீட்டு உரிமையாளரின் பான் எண் மற்றும் வாடகைதாரரின் பான் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு டிடிஎஸ் செலுத்தப்பட வேண்டும். வீட்டு உரிமையாளர் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது இந்த டிடிஎஸ் தொகையை பெற்றுக் கொள்ளலாம். தற்போதுள்ள சட்டப்படி வீட்டு வாடகையில் (மாதம் 50,000க்கு மேல் வாடகை இருந்தால் மட்டும்) 2% தொகையை டிடிஎஸ் ஆக பிடிக்க வேண்டும். வீட்டு உரிமையாளரிடம் செல்லுபடியாக கூடிய பான் எண் இல்லை என்றால் வாடகைக்கு குடியிருப்பவர் டிடிஎஸ்-ஐ 20% என உயர்த்திக் கொள்ள முடியும்.
இந்நிலையில் 2023-2024 மற்றும் 2024-25 மதிப்பீட்டு ஆண்டுகள் தொடர்பாக, வருமான வரித் துறையிலிருந்து பல வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. அதில் நீங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) கோரியுள்ளீர்கள் என்றும், ஆனால் அதில் TDS கழிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உங்கள் கோரிக்கையைக் குறைத்து புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய விரும்பினால், அதைச் செய்ய இதுவே சரியான நேரம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.. வருமான வரித்துறை இப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ள தகவலை அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அபிஷேக் முரளி கூறினார். நாடு முழுவதும் உள்ள பல வரி செலுத்துவோருக்கு இந்த அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அபிஷேக் இதுபற்றி கூறும் போது, "நீங்கள் ஒரு குறிப்பிட்ட வீட்டின் வாடகைதாரராக இருந்து ₹50,000 அல்லது அதற்கு மேல் வாடகை செலுத்தினால், வருமான வரிச் சட்டப்படி, வீட்டின் உரிமையாளருக்கு 2% TDS கழிக்க வேண்டும். எனவே TDS கழிக்கும் பொறுப்பு வீட்டின் வாடகைதாரர்களுக்கு உள்ளது.
வாடகைதாரர் அவ்வாறு செய்யத் தவறினால், அந்த நபர் தவணை தவறிய மதிப்பீட்டாளராகவே வருமான வரித்துறையால் கருதப்படுவார். பின்னர் வருமான வரித் துறை அவருக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கும். இது தனிப்பட்ட வழக்குகள் மற்றும் தவணை தவறிய நேரத்தைப் பொறுத்து மாதத்திற்கு 1-1.5% வரை அபராதத்தொகை மாறுபடும்.
அதேநேரம் இதற்கும் ஒரு விலக்கு உள்ளது. வீட்டு உரிமையாளர் தனது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வாடகை வருமானத்தைக் காட்டி, அதன் அடிப்படையில் முறையாகக் கணக்கிடப்பட்ட வரிகளைச் செலுத்தியிருக்க வேண்டும். அத்துடன் இந்த தகவலை வருமான வரி மதிப்பீட்டு அதிகாரியிடம் நீங்கள் வழங்க வேண்டும். அப்படி செய்தால் உங்களை நிலுவையில் உள்ள வரி செலுத்துபவராக வருமான வரித்துறை கருதாது.. மேலும் ஒரு ரூபாய் கூட வட்டியாகவோ அல்லது அபராதமாகோ நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
எனினும், சில நில உரிமையாளர்கள் சில ரகசிய/தனிப்பட்ட ஆவணங்களைப் பகிர்ந்து கொள்வதை விரும்பமாட்டார்கள். எனவே, வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளராக வருமான வரித்துறை உங்களுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பக்கூடாது என்றால், வாடகைதாரர் என்ற முறையில் TDS-ஐ சரியான நேரத்தில் கழித்து அனுப்புவது நல்லது," இவ்வாறு அபிஷேக் கூறினார்.












Click it and Unblock the Notifications