சரியாக இரவு 12 மணிக்கு அலறிய புழல்.. நடுங்க வைத்த சென்னை குடோன்.. வெடித்து சிதறிய ஒயர்கள்: என்னாச்சு
சென்னை: சென்னை அருகே புழல் பகுதியில், தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, புழல் - அம்பத்தூர் சாலையில் அதாவது சென்னை புழல் கேம்ப் வள்ளுவர் நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான (sea shelter wear house) பிளாஸ்டிக், ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது..

இங்கு பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
திடீர் தீ விபத்து: இந்த தொழிற்சாலையில் மூலப்பொருட்கள் அடங்கிய ரசாயன கிடங்கில், நள்ளிரவு 12 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், குடோனின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள், உடை, வாகன டயர்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தை பார்த்து பதறிப்போன அந்த பகுதி மக்கள், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அம்பத்தூர், வியாசர்பாடி, செங்குன்றம், ஆவடி, பெரம்பூர், செம்பியம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.
இறக்குமதி பொருட்கள்: வேளச்சேரி ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான குடோன் இது என்று சொல்கிறார்கள்.. தீ விபத்தில் குடோனில் பல கோடி மதிப்புள்ள இறக்குமதி பொருட்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தானது, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது..
குடோனில் கெமிக்கல்கள் நிறைய வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ரப்பர் தயாரிக்கும் மூலப்பொருட்கள், எலக்ட்ரிக் பொருட்கள் போன்றவை அனைத்தும் இந்த குடோனில்தான் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது..
இந்த பொருட்கள் எல்லாமே எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதுடன், வீர்யம் மிக்க பொருட்கள் என்பதால், தீயை இப்போது வரை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கிட்டத்தட்ட 6 மணி நேரமாகவே தீயை அணைக்க வீரர்கள் திணறி வருகிறார்கள்..

நடவடிக்கை: முக்கியமாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களில் தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகிறார்கள்.. ஆனால், அருகிலிருக்கும் வீடுகளுக்கு தீ பரவாத வண்ணம், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.. மேலும், குடோனிலிருந்த தொழிலாளிகளையும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. கொழுந்து விட்டெரியும் நெருப்பு காரணமாக, அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது.. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்... இந்த தீ விபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது..












Click it and Unblock the Notifications