தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம்.. 7 வீடுகள் கொடுத்த தமிழக வெற்றிக்கழகம்.. விஜய் அசத்தல்
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி ஒரு மாதத்திலேயே நலத்திட்ட உதவிகள் செய்ய ஆரம்பித்து விட்டார் நடிகர் விஜய். கும்மிடிப்பூண்டியில் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் 2024 மூலம் 7 வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிக்க வந்து 30 ஆண்டுகளில் 69 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்தார். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைத்து விடுத்து வந்தனர். மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கினார் விஜய். அப்போது மாணவர்களும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த மாதம் தொடங்கினார் நடிகர் விஜய். லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு எல்லாம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் தி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்ததை தான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனினும் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இலவச ஆம்புலன்ஸ் சேவை, இலவச படிப்பகம் போன்றவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இலவச சட்ட ஆலோசனை மையத்தையும் விஜய் ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கும்மிடிப்பூண்டியில் 7 பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி வீட்டு உபயோகப்பொருட்களையும் வழங்கியுள்ளனர். ஆட்சி அதிகாரம் இல்லாமலேயே நலத்திட்ட உதவிகளை செய்கிறோம். எங்களிடம் அதிகாரம் கொடுங்கள் விஜய் அசத்துவார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதே பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டிக்கொடுத்தனர் ரசிகர்கள். கன்னியாகுமரி அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் கடந்த 2022ஆம் ஆண்டு வீடு கட்டி கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டகோடு பகுதியை சேர்ந்தவர் வினுகுமார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த 5 வருடத்திற்கு முன்பு பார்வை பறிபோனது. பார்வை இழந்த பிறகு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாழடைந்த வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மழையில் வீடு முற்றிலும் சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலைக்கு மாறியது.

வறுமையில் வாடிய இவருக்கு உதவ முஞ்சிறை ஒன்றிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் முன் வந்தனர்.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுமார் 4 லட்சம் மதிப்பில் ஒரு அறை, சமையலறை, கழிவறை கொண்ட வீடு கட்டி கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வீட்டின் சாவியை வினு குமாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 7 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications