2 மேஜர் கேள்வி.. ‛தமிழகம்’ என்பதில் என்ன குறை இருக்கு? ஆளுநருக்கு ஆதரவாக திமுக மீது அண்ணாமலை அட்டாக்
சென்னை: சங்ககால இலக்கியங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது? என்பது உள்பட 2 மேஜர் கேள்விகளை எழுப்பி திமுகவை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதோடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு சப்போர்ட் செய்துள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி செயல்பட்டு வருகிறார். இவர் தொடர்ந்து சனாதன தர்மம் பற்றியும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் பேசி வருகிறார். இதனால் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.
தற்போதைய சூழலில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களும் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்காக கிடப்பில் உள்ளது. இந்நிலையில் தான் தினம்தினம் ஆளுநர் மற்றும் திமுக கூட்டணி இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது.

தமிழகம் என சொல்வதே சரி என பேச்சு
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைத்து ஆளுநர் ஆர்என் ரவி பாராட்டினார். இந்த வேளையில், ஆளுநர் ஆர்என் ரவி பேசுகையில், ‛‛பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. நமது நாடு ஒரே பாரதம். இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்'' என பேசினார்.

ஆளுநருக்கு ஆதரவாக அண்ணாமலை
தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. குறிப்பாக திமுக தலைவர்கள் ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் முரசொலி பத்திரிகையும் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் பாஜகவினர் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்என் ரவிக்கு ஆதரவாக திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளதாவது:

திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு?
‛‛திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும், சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும், பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுக கட்சினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள், ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டீர்? சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன'' என கேள்விகளை எழுப்பி உள்ளார்.

நிர்பந்திரக்கவில்லையே
மேலும், ‛‛தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை. 1956ம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்கு பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது.

விஷ செடிகளை வளர்த்த திமுக
இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கு அனைவரும் அறிவர். வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications