கண்ணை மூடிக்கொண்டிருக்க மாட்டேன்.. அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நீதிபதி சுளீர்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்து நான் கண்களை மூடிக்கொண்டிருந்தால் கடமை தவறி விடுவேன் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணை செய்தது.

2006 இருந்து 2011 ஆம் ஆண்டு வரை நடைப்பெற்ற திமுக ஆட்சி காலத்தில், அமைச்சர்களாக இருந்த இவர்கள், வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்ததாக 2012 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பிலும், அவர்களது குடும்பத்தினர் தரப்பிலும் மற்றொரு வழக்கு தொடுக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட கீழமை நீதிமன்றம், அவர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் விடுதலை செய்தது. பின் வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வழக்கினை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.
எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னதாக பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்திருந்தார். அப்படி தற்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கையும் விசாரணைக்கு எடுத்து இருக்கின்றார்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வழக்குகள் விசாரணை தொடங்கிய போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, லஞ்சபொழிப்புத் துறையினரின் விளக்கங்களை கேட்காமல் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும் எனவும் விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை என்றார்.
அதற்கு, வழக்கில் பதிலளிக்க மட்டுமே உத்தரவிடப்படுகிறது என்றும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2021ம் ஆண்டு இந்த வழக்குகளில் விடுவிக்க கோரிய மனுக்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, ஆட்சி மாற்றத்துக்கு பின், மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்றார்.
இந்த வழக்கில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இரு உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும், இதை அனுமதித்தால் கடமை தவறியதாகி விடும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. ஆனால் இந்த நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2021க்கு பிறகு தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதாகவும், உண்மையில் சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
ஏற்கெனவே அமைச்சர் பொன்முடி மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை மறுவிசாரணைக்கு இதேபோல நீதிமன்றம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கீழமை நீதிமன்றம் விசாரித்து வழங்கும் குற்றவியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில், தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால்தான், அதன் அடிப்படையில் அவ்வழக்கு மறுவிசாரணைக்கு தாக்கல் செய்யப்படும்.ஆனால் பொன்முடி சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றங்களில் வழக்கு மாற்றப்பட்டதில் முறைகேடு இருக்கின்றது என்று கூறப்பட்டு, அதன் அடிப்படையில்தான் மீண்டும் வழக்கானது விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் மீண்டும் நீதிமன்ற படியேற உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications