"சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிட்டாங்க.." சிறை வாசலில் சீரியசாக சொன்ன கஸ்தூரி
சென்னை: சென்னை புழல் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி இன்று வெளியில் வந்தார். அப்போது அவரது தொண்டர்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பேசிய நடிகை கஸ்தூரி, "என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி.. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை மற்றும் மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று நடிகை கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

பிணைப்பத்திரம் கொடுப்பதில் தாமதம் ஆனதால் இன்று மாலை 5 மணியளவில் நடிகை கஸ்தூரி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த நடிகை கஸ்தூரியை புழல் சிறை நுழைவு வாயிலில் வைத்து அவரது ஆதரவாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். "மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க.. கஸ்தூரி வாழ்க.." என்ற கோஷத்துடன் அவரை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நடிகை கஸ்தூரி கூறியதாவது:- அனைவருக்கும் வணக்கம். என்னை குடும்பம் போல் பாதுகாத்த நண்பர்களுக்கு நன்றி.. என்னுடைய வழக்கறிஞர்களுக்கு நன்றி.. அரசியல் வித்தியாசம் பார்க்காமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி..
ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய மனம் மிகுந்த நன்றி.. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி.. இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை கஸ்தூரி: கடந்த 3 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், "பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் வன்கொடுமை சட்டம் போல பிசிஆர் சட்டம் தேவை" என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து தனது பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார். எனினும், கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி தெலுங்கு சம்மேளனம் அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் மற்றும் மதுரையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து கஸ்தூரி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இதற்கு மத்தியில் நடிகை கஸ்தூரி தலைமறைவு ஆனதால், அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். தொடந்து 17 ஆம் தேதி இரவு நடிகை கஸ்தூரி, ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் வைத்து அவரை கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கஸ்தூரிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் கஸ்தூரி அடைக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் இன்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications