பாஜகவிற்கு அறிவு இருக்கிறதா.. ஆவேசமாக கேள்வி எழுப்பிய அறப்போர் இயக்கம்.. அண்ணாமலை சொன்ன பதில்
சென்னை: பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்பு பகுதியை ஒட்டி பாஜக கொடிக்கம்பங்களை அக்கட்சியினர் வைத்திருந்ததை விமர்சித்து இருந்த அறப்போர் இயக்கத்தினரின் ட்விட் பதிவுக்கு பாஜக அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார்.
சென்னை நுங்கம் பாக்கம் பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு பகுதியை ஒட்டி பாஜக கொடி கட்டப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் தமிழக பாஜகவை விமர்சித்து இருந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
போனை எல்லாம் வச்சுட்டு வாங்க! ஆர்டர் போட்ட அண்ணாமலை.. நாக்பூர் வரை போன புகார்.. கமலாலய யுத்தம்!

சென்னையில் கனமழை
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கிறது. புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கடலும் கொந்தளிப்பாக காட்சியளிக்கிறது. தலைநகர் சென்னையிலும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையின் நுங்கபாக்கம், குரோம்பேட்டை, கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல், பிராட்வே என பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிரது.

சாலையின் நடுவே கொடிக்கம்பம்
சென்னை பெசண்ட் நகர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே, சாலைகள் நடுவே கொடிக்கம்பம் கட்டி வைத்திருந்த பாஜகவை சாடி அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் வெங்கடேஷன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்த ஜெயராம் வெங்கடேஷன் கூறியதாவது;-

அறிவு இருக்கிறதா
புயல் வரும் நாள் அன்று இப்படி பிஜேபி கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே?? கொடி காற்றில் விழுந்து 4 பேர் செத்தா உங்களுக்கு என்ன ? தமிழக காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

அண்ணாமலை பதில் ட்விட்
உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி" என பதிவிட்டுள்ளார். சாலையோரம் அரசியல் கட்சிகள் இப்படி விளம்பரத்திற்காக வைக்கபடும் விளம்பர பதாகைகள் மற்றும் கொடிக்கம்பங்களால் மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

விழுந்துவிடும் அபாயம் இருப்பதால்..
அனுமதியின்றி நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் விளம்பர பதாதைகள் பாதசாரிகளுக்கும் கடும் சிரமத்தை அளித்து வருகிறது. அதுவும் மழைக்காலங்களில் எப்போது வேண்டும் என்றாலும் விழுந்து விடும் அபாயத்துடன் இருப்பதால், விதிகளை மீறி வைக்கப்படும் இதுபோன்ற கொடிக்கம்பங்களையும் பதாகைகளையும் அரசியல் கட்சிகள் தவிர்த்தால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்தாக உள்ளது.