புலியா.. மனித உயிரா.. எது பெரிது..? புலியை சுட்டுப்பிடிக்க எதிர்ப்பு... ஹைகோர்ட்டில் நாளை விசாரணை..!
சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் தனியார் எஸ்டேட் பகுதியில், 51 வயதுடைய சந்திரன் என்பவர் கடந்த 24-ம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது புலி தாக்கி அவர் உயிரிழந்த நிகழ்வை அடுத்து அந்த புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறை
புலி வனத்துறை அலுவலர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் காட்டி வருவதால் அதை இதுவரை பிடிக்க முடியவில்லை. புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினரும் இதனால் சோர்வடைந்துள்ளனர். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று பசுவன் என்பவரையும் அந்த புலி அடித்துக்கொன்றது. இதனால் தேவர்சோலை, குறும்பர்பாடி கிராம மக்கள் பீதி அடைந்தனர்.

சுட்டுப்பிடிக்க
தங்கள் பகுதியில் உலவி வரும் புலியை பிடிக்காவிட்டால் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்லக்கூடும் என தங்களது அச்சத்தை அரசுக்கு வெளிப்படுத்தினர். புலியா மனித உயிரா என பார்க்கும் போது மனித உயிர் விலைமதிப்பற்றது என்பதை கருத்தில்கொண்டு புலியை சுட்டு பிடிக்கவாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொதுநல வழக்கு
இதையடுத்து, புலியை சுட்டுக் கொல்வது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நாளை விசாரணை
அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications