100..வசமாய் சிக்கிய ரத்தத்தின் ரத்தங்கள்! ரத்தக் களரிக்கு காரணமே அவங்க தான்? சிபிஐசிடியின் ஸ்கெட்ச்!
சென்னை : அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கலவர வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இதுவரை 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகம்
பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சீல் அகற்றப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் கட்சி அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார்.

சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததோடு, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டார். மேலும் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோரும்இடம்பெற்றனர்.

100 பேர்
இந்நிலையில் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கலவரம் தொடர்பான வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை வைத்து இதுவரை 100 நபர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்?
தற்போதுஇந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்டமாக கலவரத்தில் தொடர்பு உடையவர்களை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கலவரத்தின் போது அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த அனைவருமே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தானா என்பதனை கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications