வரலாறு முக்கியம் அமைச்சரே! திமுகவின் பிரச்சார பீரங்கி “வைகோ” அன்று! மதிமுக தொடங்கப்பட்ட நாள் இன்று!
சென்னை : தாய் கழகமான திமுகவில் இருந்து வைகோ வெளியேறி மதிமுக எனும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய நாள் 1994ஆம் ஆண்டு மே 6 அதாவது இன்று. கட்சி தொடங்கிய நாள் முதல்வர் தற்போது வரை வைகோவின் அரசியல் பயணம் குறித்து சில தகவல்களை பார்க்கலாம்..
1993ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர்.
1994 ஆம் ஆண்டு மே 6ஆம் நாள், சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு புதிய அமைப்பின் கொடி கொள்கை குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்து, வெளியிட்டது.

வைவோ என்ற வை.கோபால்சாமி
அந்த காலகட்டத்தில் காலத்தில் திமுக என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய் தளபதியாய் கருணாநிதியின் அன்புத்தம்பியாய் விளங்கியவர்தான் வை.கோபால்சாமி என்ற வைகோ'. எப்படி அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி கட்சியை கைப்பற்றிய நிலையில், திமுக தனது வாரிசுகளுக்கே சொந்தம் என்ற நிலையை உருவாக்கியதுதான் திமுகவை விட்டு வைகோ வெளியேறியதற்கான காரணம் என கூறப்படுகிறது

விடுதலை புலிகளுடன் தொடர்பு
அவர் வெளியேற மற்றொரு காரணமும் உண்டு அது விடுதலைப் புலிகளுடன் வைகோவிற்கு தொடர்பு உண்டு என்பது. கட்சிக்குச் சொல்லாமல் வைகோ யாழ்ப்பாணத்திற்கு ரகசிய பயணத்தை மேற்கொண்ட விவகாரம் திமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலரிடமிருந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் விடுதலைப் புலிகளால் அவரது உயிருக்கு ஆபத்து வரலாம் என மத்திய அரசுக்கு தகவல் தெரிய வந்திருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க முதலமைச்சர் கூறியிருப்பதாக அந்த கடிதம் தெரிவித்தது.

கருணாநிதிக்கு ஆபத்து
இந்தச் செய்தியை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கருணாநிதி. இதையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வைகோ, மத்திய அரசின் உளவுத் துறையினர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாக தலைவர் கருணாநிதி பலமுறை கூறியிருப்பதை நினைவுகூர்கிறேன். என்னால் திமுக தலைவர் கலைஞருக்கோ கட்சிக்கோ கடுகளவும் கேடுவராமல் தடுக்க என்னைப் பலியிடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் நான் சித்தமாகவே இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக திமுகவில் ஒரு பிரிவினர் திரள ஆரம்பித்தனர்.

கட்சியிலிருந்து நீக்கம்
இதன் உச்சகட்டமாக வைகோவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார் பொதுச் செயலாளர் க. அன்பழகன். முடிவில் 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் வைகோ. அவருடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பிரிந்து சென்றனர். வைகோவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். வைகோவை கட்சியில் இருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்து நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திமுகவின் 9 மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோவுக்கு ஆதரவாகக் கிளம்ப வைகோவுடன் சேர்த்து, அவர்களையும் திமுக தலைமை நீக்கியது.

மதிமுக என்ற புதிய கட்சி
இதையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய வைகோ, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாற்றாக அந்தக் கட்சியை முன்வைத்தார். வைகோ மதிமுக தொடங்கிய பின், இளைஞர்கள் மத்தியில் பெருத்த ஆதரவு உருவாகியது, அவர் நடத்திய மாநாடுகள், பேரணிகள் அனைத்திலும் திரண்ட தொண்டர்கள் கூட்டம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக என 1500 கி.மீ . தொலைவு 51 நாட்கள் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இது தமிழகத்தில் வைகோவுக்கான ஆதரவை வலுப்படுத்தியது.

பல கட்சிகளுடன் கூட்டணி
ஆனால் காலம் அப்படியே மாறியது. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற/நாடாளமன்ற தேர்தலில் தனது மதிமுகவுடன் அன்றைய மத்திய காங்கிரசின் எதிர்கட்சியான ஜனதா தளம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, திவாரி காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்று வைகோ தலைமையில் கூட்டணி அமைந்தது ஆனால் கூட்டணி பெயர் பிரச்சனையால் பாமக, திவாரி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது.

மதிமுகவுக்கு அமைச்சர் பதவி
1998 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக அதிமுக அங்கம் வகித்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டி யிட்ட நிலையில் முதல் முறையாக வைகோ அவர் கட்சியின் சார்பாக மக்களவை உறுப்பினர் ஆக பொறுப்போற்றார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-பாஜகவின் தலைமையிலான கூட்டணியில் வைகோ தொடர்ந்தார். மதிமுக சார்பில் இரண்டு அமைச்சர்கள் மத்திய இலாக்கா மந்திரியாக பொறுப்பெற்று கொண்டனர்.

திமுகவுடன் கூட்டணி
2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சனையால் மதிமுக தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் அங்கம் வகிக்கித்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக இம்முறையும் சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்பு வைகோ ஈழ தமிழர்கள் விவகாரத்தில் எதிராக செயல்பட்ட கூட்டணி தலைமை கட்சியான காங்கிரசின் செயல்பாட்டை கண்டித்து 2007ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார்.

அதிமுகவுடன் கூட்டணி
2006 சட்டமன்றத் தேர்தலின் தன்னை முந்தைய ஆட்சி காலத்தில் 19 மாதங்கள் சிறையில் அடைத்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணைந்தது மக்களிடையே விமர்சிக்கபட்டாலும் இத்தேர்தலில் அதிமுக-மதிமுகவிற்க்கு 35 தொகுதிகள் வழங்கியது. அதில் வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், கம்பம், தொண்டான்முத்தூர் ஆகிய 6 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக்கு சென்றனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக இத்தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஈரோடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

பாஜகவுக்கு ஆதரவு
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக இத்தேர்தலில் தொகுதி பங்கீடு தராத காரணத்தால் கூட்டணியிலிருந்து விலகியது. இதை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தேர்தல் புறக்கணிப்பு செய்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியை ஆதரித்து வைகோ பிரச்சாரம் செய்தார்.

மக்கள் நல கூட்டணி
2016 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என்ற தமிழக தேர்தல் களத்தில் வெற்றி பெற்று ஆளும் கட்சிகளிடம் கூட்டணியில் ஈடுபடாமல் மதிமுக தலைமையில் வைகோ அவர்கள் உருவாக்கிய மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் அவர்களை முதலமைச்சராக அறிவித்து அவரது தேமுதிக-மதிமுகவுடன் விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் போன்ற தமிழக கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மிக பெரிய கூட்டணியாக அமைந்தது. திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று சவாலாக மாற்று ஆட்சி தத்துவத்தில் வைகோ அவர்கள் வழி நடத்தி சென்ற போதிலும் இத்தேர்தலில் இக்கூட்டணி கட்சிகளுக்கு பெரும் தோல்வியே கிடைத்தது.

ஸ்டாலினுக்கு ஆதரவு
2019 நாடாளுமன்றத் தேர்தலில் முந்தைய காலத்தில் கடுமையாக விமர்சித்து வந்த திமுக மற்றும் காங்கிரசுடன் வெகுநாள் கழித்து மீண்டும் தனது மதிமுக கூட்டணியில் சேர்ந்து செயல்பட்டது. தேர்தலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே திமுகவின் அடுத்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என்று திமுகவே அறிவிக்காத நிலையில் வைகோ அவர்கள் ஸ்டாலினை திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார். பின்பு வைகோவும், ஸ்டாலினும் தோழமை பாராட்டி வந்த நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் வைகோ அவர்களை திமுகவில் விலக்கபட்டதிலிருந்து தனது தந்தை கருணாநிதியே வெகுநாட்களாக வழங்காத மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஸ்டாலின் வழங்கினார்.

உதயசூரியன் சின்னம்
இம்முறை 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 30 வருடங்கள் கழித்து நான்காவது முறையாக வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் திமுக தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

வாரிசு அரசியல் சர்ச்சை
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைகோவின் மகனான துரை வைகோ மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சில மூத்த நிர்வாகிகள் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட மதிமுகவின் வாரிசு அரசியலா என அவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கட்சியின் பொதுக்குழுவிலும் இதுகுறித்து காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் வெடித்து கிளம்பி வருகிறது. வாரிசு அரசியல் காரணமாக ஆரம்பித்த வைகோவின் அரசியல் பயணம் வாரிசு அரசியலாலேயே சிக்கலில் நிற்கிறது.












Click it and Unblock the Notifications