நேர்ல வாங்க.. அறிக்கையில் அனல் காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. கூட்டணி கட்சிகள் “ ஹாப்பி அண்ணாச்சி” ..!
சென்னை : கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலகி தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பெருவெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி தொடர்ந்த நிலையில் அவர்களுக்கு சில இடங்களில் நகராட்சித் தலைவர் நகராட்சி துணைத்தலைவர் பேரூராட்சித் தலைவர் பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக ஒதுக்கியது.

முதல்வருக்கு கோரிக்கை
ஆனால் கட்சித் தலைமையை மீறி பல இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றினர் இதனால் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் திமுகவினர் குறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

ஸ்டாலின் அறிக்கை
இதே போல காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆலோசனை நடத்தி நிலையில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதில் திமுகவினர் செயல்பாடுகளால் நான் கூனிக் குறுகி நிற்கிறேன் என கூறியதோடு, கழகத்தின் நற்பெயருக்கு கலங்கம் படைத்தவர்கள் அந்த பொறுப்பை விட்டு விலகி விட்டு என்னை நேரில் வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

கூட்டணியினர் மகிழ்ச்சி
மேலும், மாவட்ட கழக செயலாளர்கள் பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக கூறி இருந்தார். இதனால் கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்பட்டிருந்த சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பலரும் வரவேற்பு
கூட்டணி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில், தங்களது கட்சியினர் என்றும் பாராமல் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை அவரது நல்ல மனதை காட்டுவதாகவும் புகழ்ந்து வருகின்றனர். இது ஒரு நல்ல தலைமைப் பண்புக்கு அடையாளம் எனவும் கூட்டணி கட்சியினர் திமுகவின் வெற்றிக்கு காரணம் எனக் கூறியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுவதாகவும் ஏராளமான சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications