சென்னையில் மரண சாலையாக மாறிய மடிப்பாக்கம் சாலைகள்.. மழை மட்டும் காரணமல்ல.. குமுறும் மக்கள்
சென்னை: மழை நீர் வடிகால்கள் மற்றும் மெட்ரோ வாட்டர் பைப் லைன் பணிகள் நடந்து வரும் காரணத்தால் சென்னை மடிப்பாக்கம் முழுவதுமே வாகனங்கள் ஓட்டிச் செல்ல முடியாத அளவிற்கு மிக மோசமாக மாறி உள்ளன. இந்த சூழலில் இன்று அதிகாலை பெய்த மழை, வாகன ஓட்டிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் எந்த பள்ளத்தில் சிக்கி என்னாகுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றன. பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து உள்ளதாகவும், மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட இடங்களில் எந்த எச்சரிக்கை பலகையும் இல்லை என்றும், விபத்து நடப்பதற்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

சென்னை மடிப்பாக்கம் பகுதி சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. சென்னையுடன் இணைந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகளும், மழைநீர் வடிகால் பணிகளும் இன்னும் பல இடங்களில் முடியவில்லை. குடிநீர் பைப்லைன் பதிக்கும் பணிகளுமே இன்னும் பல பகுதிகளில் நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சாலைகளில் பயணிப்பது கடினமாகி உள்ளது.
சாலைகள் எதுவுமே சரியாக இல்லை. எல்லா சாலைகளும் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் செல்லவே முடியாத அளவிற்கு படுமோசமாக சாலைகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். மழைக்காலங்களில் மடிப்பாக்கத்தின் அனைத்து சாலைகளுமே இருசக்கர வாகனங்கள் கூட செல்வதற்கு கடினமாக மாறி உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த சூழலில் கடந்த 4 மாதங்களில் தற்போது தான் முதல்முறையாக சென்னை மிக கனமழையை சந்தித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு இன்று தான் சென்னையில் அதீத கனமழை பெய்துள்ளது. ஒரே நாளில் 16 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது.
இந்த சூழலில் மழை நீர் வடிகால்களுக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பெய்த மழையால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன. சாலைகள் எங்குமே இல்லாத அளவிற்கு தோண்டப்பட்டிருப்பதால், வாகனங்களில் செல்வது சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள். குறிப்பாக பெரியார் நகர், ராம்நகர் தெற்கு, எல்ஐசி நகர், எஸ். கொளத்தூர் போன்ற பகுதிகளில் வெள்ளநீர் ஒருபக்கமும், சாலை வசதிகள் இல்லாத நிலையும் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், மடிப்பாக்கம் பகுதி மக்கள் தங்களது கார்களை மெட்ரோ வாட்டர் சாக்கடை பள்ளங்களில் விட்டு சிக்கி கொண்டனர். அந்த பகுதியில் தடுப்புகள் இல்லை, எச்சரிக்கை பலகையும் இல்லை. இது தொடர்பாக ரோகித் என்பவர் கூறுகையில், மடிப்பாக்கத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்படித்தான் இருக்கின்றன. எப்போது சாலையில் விழுந்து காயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். சாலை தோண்டப்பட்டது தெரியாமல் வந்த வயதான பக்கத்து வீட்டுக்காரர் கீழே விழுந்தார். அவருக்கு கை உடைந்தது. இதற்கு காரணம் அங்கு எந்த தடுப்புகளும் இல்லாததுதான் காரணம்.
அய்யாவு என்பவர் கூறுகையில், மடிப்பாக்கம் வார்டு 188லும் இதே நிலைதான். மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் மெதுவாக உள்ளது. கிட்டத்தட்ட எல்லா தெருக்களிலும் வேலைகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. மக்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது. எந்த ஒரு சாலையும் வேலை முடிந்து, முழுமையாக சாலை சீரமைக்கப்பட்டதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications