பாம்பின் விஷத்தையும் தின்று வாழும் தேன் கரடி.. சிங்கத்தையே அலறவிடும் ஆப்பிரிக்க அதிசயம்
சென்னை: காட்டு ராஜாவுக்கே தண்ணி காட்டும் ரியல் ஹீரோ தேன் கரடி பற்றி தெரியுமா? பார்ப்பதற்கு இத்துனுண்டு இருந்தாலும், சிங்கம் முதல் விஷப் பாம்புகள் வரை எதை கண்டும் அஞ்சாத ஒரு விசித்திரமான விலங்கு இது. இயற்கையின் படைப்பில் வியக்கத்தக்க தற்காப்பு திறன்களையும், அசாத்திய துணிச்சலையும் கொண்ட இந்தத் தேன் கரடியின் மிரட்டலான குணம் என்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தேன் கரடி என்று சொன்னாலே பலருக்கு ஒரு சாதாரண கரடி வகை என்றுதான் தோன்றும். ஆனால், உண்மையில் இது கீரி வகையைச் சேர்ந்த ஒரு குட்டி விலங்கு.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் அடர்ந்த காடுகள், புல்வெளிப் பகுதிகளில் இது அதிகம் காணப்படுகிறது. பார்ப்பதற்கு முதுகுப் பக்கம் நரைத்தது போல வெள்ளை நிறத்திலும், உடலின் மற்ற பகுதிகள் கறுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் தோற்றம் வேண்டுமானால் மென்மையாக தெரியலாம், ஆனால் இதன் குணம் அசாத்தியமான துணிச்சல் கொண்டது.
தேன் கரடி சின்ன விலங்கு
இயற்கையிலேயே எதற்கும் அஞ்சாத குணம் இதற்கு உண்டு. காட்டில் இருக்கும் மற்ற விலங்குகள் ஒரு ஆபத்து என்றால் ஒளிந்து கொள்ளப் பார்க்கும். ஆனால் தேன் கரடி, தன்னைவிடப் பல மடங்கு பெரிய விலங்காக இருந்தாலும் பின்வாங்காமல் எதிர்க்கும்...
இதற்கு தேன் கரடி என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா? தேனீக்களின் கூட்டை உடைத்துத் தேன் குடித்துவிடுமாம்.. நூற்றுக்கணக்கான தேனீக்கள் கொட்டினாலும், அவற்றின் வலியை தாங்கி கொண்டு தேனை ருசி பார்க்கும் இதன் பிடிவாதம் வியக்கத்தக்கது.
இந்த தேன் கரடியை பெரும்பாலும் சிங்கத்துடன் ஒப்பிட்டு சொல்வார்கள்.. சிறுத்தை, புலி என எத்தனையோ வேட்டையாடிகள் இருந்தாலும், ஏன் சிங்கத்துடன் இதை ஒப்பிடுகிறார்கள் என்பதுதான் இதில் சூப்பரான விஷயம்.
விஷப் பாம்புகள்
ஒரு சிங்கம் நினைத்தால் தேன் கரடியைத் தனது வலிமையால் வீழ்த்திவிட முடியும். ஆனால், ஒரு தேன் கரடியுடன் மோதுவது என்பது சிங்கத்திற்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தேன் கரடியின் தோல் அத்தனை தடிமனானது மற்றும் தளர்வானது. சிங்கத்தின் கூர்மையான பற்கள் அதன் உடலுக்குள் ஆழமாக இறங்குவதை இந்த தடிமனான தோல் கடினமாக்குகிறது.
ஒருவேளை சிங்கம் கடித்தால் கூட, அந்தத் தளர்வான தோலுக்குள் தேன் கரடி அப்படியே தன்னை சுழற்றிக் கொண்டு, சிங்கத்தின் முகத்திலேயே பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
சிங்கத்தை விடத் தேன் கரடிக்கு வலிமை தருவது அதன் மன தைரியமும், தனித்துவமான உடலமைப்பும் தான். ஏனென்றால் இதன் தோல் மட்டும் கிட்டத்தட்ட 6 மில்லிமீட்டர் தடிமன் கொண்டதாம்.
தேன் கரடி ஸ்பெஷல்
இது மற்ற விலங்குகளின் தாக்குதலில் இருந்து ஓரளவுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமானது, இதற்கு இருக்கும் விஷ எதிர்ப்பு தன்மை... அதாவது கொடிய பாம்புகள் கடித்தால் கூட, இதன் உடலில் இருக்கும் செல்கள் அந்த விஷத்தின் பாதிப்பை தாங்கும் வகையில் அமைந்திருப்பதுதான் இந்த குட்டி விலங்கின் ஸ்பெஷாலிட்டி.
ஒரு சில நிமிடம் விஷத்தின் தாக்கத்தால் மயக்கத்தில் கிடக்கும் இந்த விலங்கு, பிறகு மெல்ல மீண்டு வந்து எழுந்து அசால்ட்டா நடக்க தொடங்குமாம்.
ஒரு பக்கம் பலம் பொருந்திய காட்டின் ராஜா, மறுபக்கம் எதற்கும் பணியாத இந்தச் சிறிய தேன் கரடி. இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் மோதல் என்பது உடல் வலிமை சார்ந்தது மட்டுமல்ல, அது நேரத்தை செலவழிப்பது சார்ந்தது என்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள்..
சிங்கத்தையே யோசிக்க வைக்கும்
சிங்கங்கள் பொதுவாக அதிக நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்து இந்தத் தேன் கரடியுடன் சண்டையிட விரும்புவதில்லையாம்.. ஏனென்றால் தேன் கரடியால் பெரிய அளவில் வேட்டையாட முடியாவிட்டாலும், அது சிங்கத்திற்கு சில காயங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால்தான் பல நேரங்களில் தேன் கரடியுடன் வீணாக மோதுவதைத் தவிர்த்து சிங்கம் விலகி சென்றுவிடுமாம்.
ஆக, காட்டில் உருவம் மட்டும் முக்கியமல்ல, தற்காப்புத் திறனும் முக்கியம் என்பதற்கு இந்தத் தேன் கரடி ஒரு சிறந்த உதாரணம். உருவத்தில் சின்னதாக இருந்தாலும், சிங்கத்தையே யோசிக்க வைக்கும் இந்தத் தேன் கரடியின் குணம் இயற்கையின் ஒரு விசித்திரமான படைப்பு. ஒரு செய்தியாளராகப் பார்க்கும்போது, வலிமையானவர்களை விடத் துணிச்சலானவர்களே பல நேரங்களில் வியப்பைத் தருகிறார்கள் என்பது புரிகிறது...!!













Click it and Unblock the Notifications