50+ வயது பெண்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாதா? அதிகாரிகளுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!
சென்னை: 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின் போது, 50 வயதுக்கு மேலான பெண்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சசிகலா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், நள்ளிரவு வரை இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்று, வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும், அந்த நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வாதிடப்பட்டது.
தேர்தல் பணிக்கு செல்லும் பெண்களுக்கு போக்குவரத்து, உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை எனவும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், பல்வேறு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்திய அரசியல் சாசனம் 324வது பிரிவின் கீழ் தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விதிகளை வகுத்திருக்கிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதில் இருந்து சில பிரிவினருக்கு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் தேர்தல் பணிக்கு அழைக்க கூடாது என கொள்கைகளும் உள்ளன எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications