“புஷ்ஷுன்னு” போச்சே.. அண்ணாமலை சொன்னாரே ஆதாரம்! 1956 சம்பவத்தை பகிரங்கமாக மறுத்த ஆங்கில நாளிதழ்
சென்னை: பேரறிஞர் அண்ணா முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கோரியதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், இது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் விளக்கம் அளித்து உள்ளது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதிமுக - பாஜக கூட்டணியிலேயே பிளவை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் பேரறிஞர் அண்ணாவையே அண்ணாமலை விமர்சித்துவிட்டார் என்பதுதான்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், "கடந்த 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். அப்போது கடவுளை அவர் கிண்டல் செய்ததால் முத்துராமலிங்க தேவர் கோபமடைந்தார்.
இனி கடவுளை யாராவது கேலி செய்து பேசினால் ரத்தத்தில் மீனாட்சியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் என எச்சரித்தார். இதனை அடுத்து அறிஞர் அண்ணா முத்துராமலிங்க தேவருக்கு பயந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்." என்று கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜு, எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார்கள். செல்லூர் ராஜு ஆற்றிய உரையில், "ஒருவர் பித்து பிடித்ததைபோல் பேசுகிறார். இறந்த தலைவர்களை இழிவாக பேசுபவன் இழிபிறவி.
நீ ஆளுங்கட்சி என்ற திமிரில் இருக்கலாம். அண்ணா பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு துண்டாகும். இங்கு அப்படிப்பட்ட கொள்கை மறவர்கள் உள்ளோம். அண்ணா கட்சி தொடங்காவிட்டால் இன்று குப்பனும் சுப்பனும் அமைச்சராகி இருக்க முடியுமா? அவரை பற்றி இழிவாக பேசுகிறீர்களே.. உங்கள் நாக்கு அழுகிப் போகும்." என சாடினார்.
மறுபக்கம் ஜெயக்குமாரும், "மறைந்த தலைவர்களை பற்றி அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். பாஜகவை வளர்ப்பதற்காக அண்ணாமலை மறைந்த தலைவர்களை பற்றி அவதூறு பேசக்கூடாது. உலகத் தமிழர்களால் போற்றப்படும் உன்னத தலைவர் அறிஞர் அண்ணா.

அண்ணா புகழுக்கு களங்கம் கற்பிப்பது ஏற்க முடியாது." என்றார். மற்றொரு பேட்டியில் அதிமுக - பாஜக கூட்டணியே முறிந்துவிட்டதாக ஜெயக்குமார் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையும் தன் பேச்சியில் இருந்து பின் வாங்காமல் தன்னை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்களை விமர்சித்தார்.
அப்போது தி இந்து ஆங்கில நாளிதழிலில், அண்ணா குறித்து தான் சொன்ன செய்தி இடம்பெற்று உள்ளதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் தற்போது விளக்கமளித்து இருக்கிறது. அதில் "மதுரை தமிழ் சங்க பொன்விழா தொடர்பாக 1956 ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை தி இந்துவில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், அதில் அண்ணா முத்துராமலிங்க தேவரிடம் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications