ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி விறு விறு! தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி!
சென்னை: தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மின் மீட்டர்களை பொருத்துவதற்காக ரூ.10,790 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
இதனிடையே விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண் இணைப்பு கட்டாயம்.. இன்னலில் மக்கள்.. சீமான் கோரிக்கை

ஸ்மார்ட் மின் மீட்டர்
தமிழகத்தில் மூன்றே கால் கோடி வீட்டு மின் இணைப்புகளும், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 10 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. மத்திய அரசின் சீரமைக்கப்பட்ட துறைத் திட்டத்தின் கீழ் 13 மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ரூ.10,790 கோடி நிதி
அவற்றில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.10,790 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதில் முதற்கட்டமாக ரூ.8,600 கோடி நிதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர்களை வாங்குவதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் அதற்கான டெண்டர் விடப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயர் நகரில் மட்டும் 1.09 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

2 திட்டங்கள்
ப்ரிபெய்டு, போஸ்ட் பெய்டு ஆகிய இரண்டு திட்டங்களின் அடிப்படையில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் தகவலாகும். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டால் மின் பயன்பாட்டை கணக்கிட மின்வாரிய ஊழியர் வீட்டுக்கு வரத் தேவை இருக்காது. மின் நுகர்வோர் எத்தனை யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியிருக்கிறார், எவ்வளவு மின் கட்டணம் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., மூலம் வந்துவிடும்.

மிகத் துல்லியமாக
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால் மின்சார பயன்பாடு குறித்த அளவீடு மிகத் துல்லியமாக கணக்கிடப்படும். டிஜிட்டல் மின் மீட்டர்களுக்கும், ஸ்மார்ட் மின் மீட்டர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது இதில் கவனிக்கத்தக்கது. இதனிடையே ஸ்மார்ட் மின் மீட்டர் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.