வயதான பெற்றோர், மூத்த குடிமக்களுக்கு.. தமிழக அரசு சென்னை ஹைகோர்டில் சொன்ன பெரிய குட்நியூஸ்
சென்னை: பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக்கோரி சி.குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ. இளையபெருமாள், அரசு தரப்பில் அரசு ப்ளீடர் பி. முத்துக்குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர். அனிதா ஆகியோர் ஆஜராகினர்.
அரசு தரப்பு வாதத்தில், மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரத்தை சேகரித்து வைக்கவும், அவர்கள் ஏதேனும் புகாரளித்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதனை தீர்த்து வைக்கவும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் என்ன சொல்கிறது: பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் படி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் மற்றும் சொத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில், உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையெனில், இச்சட்டத்தின் கீழ் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெற முடியும்.
அதேநேரம் உறவினர் மைனராக இருக்கக்கூடாது மற்றும் பராமரிப்பை வழங்க போதுமான வசதிகள் அவருக்கு இருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் சொத்தை வாரிசாகப் பெறுவதற்கு உரிமை பெற்றிருந்தால், சொத்தின் பரம்பரை விகிதத்தில் உறவினர்கள் அவருக்கு பராமரிப்புச் செலவுகளை தர வேண்டும். அதிகபட்ச பராமரிப்பு தொகை மாதம் 10,000 ரூபாய் என்று சட்டம் சொல்கிறது. பராமரிப்புத் தொகையானது உரிமை கோருபவரின் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதேநேரம் ஒரு நபர் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கு பராமரிப்பு தொகை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications