சென்னையில் நாளை வெளியிடப்படுகிறது பா.ஜ.க தேர்தல் அறிக்கை.. மக்களை கவரும் திட்டங்கள் இடம்பெறுமா?
சென்னை: அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழக தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துள்ளது. திமுகவும் மக்களை கவரும்படியாக பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்துள்ளது.

தேர்தலின் கதாநாயகன்
தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. வாட்டி வதைக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் மக்களிடம் இருந்து வாக்குகளை கவரும் கதாநாயகன்தான் தேர்தல் அறிக்கை. தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

இலவசத்தை அள்ளித்தெளித்த அதிமுக
இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் குறி வைத்து இருப்பது குடும்ப தலைவிகள்தான். திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என முக்கிய கட்சிகள் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்த்துள்ளன. அதிமுக வீடுகளுக்கு வாஷிங்மெஷின், ஆண்டுக்கு 6 சிலிண்டர், கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா என்று இலவச வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துள்ளது. திமுகவும் மக்களை கவரும்படியாக பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்துளளது.

வித்தியாசமான திட்டங்கள்
மக்கள் நீதி மய்யம் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு என்ற வித்தியாசமான அறிவிப்பை கூறியுள்ளது. திமுகவே மறந்த மது விலக்கு கொள்கையை அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாமகவும் முதன் முதலாக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் இலவசங்களுக்கு இடம் இல்லை என்று கூறி வித்தியாசமான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

பாஜக தேர்தல் அறிக்கை
அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள மத்தியில் ஆளும் பாஜக எப்போது தேர்தல் அறிக்கை வெளியிடும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை சென்னையில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். திராவிட கட்சிகளை போல் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி திட்டங்கள் இருக்குமா? இலவச திட்ட வாக்குறுதிகள் இருக்குமா? என்பது நாளை தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications