போலீஸாகவே இருந்தாலும்.. பொதுமக்களிடம் அத்துமீறவோ, மிரட்டவோ முடியாது.. உச்ச நீதிமன்றம் கருத்து
சென்னை: காவல்துறையினராக இருந்தாலும் பொதுமக்களிடம் அத்துமீறுவதற்கோ, அவர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுவதற்கோ சட்டத்தில் இடம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன்னுடன் பணிபுரியும் ஒருவரின் வருங்கால மனைவியிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட சிஆர்பிஎப் வீரரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிடும் போது, இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
மேலும், அந்த சிஆர்பிஎப் வீரரின் டிஸ்மிஸ் உத்தரவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

சிஐஎஸ்எப் வீரர்
குஜராத் மாநிலத்தில் மத்திய கம்பெனி போலீஸ் படையில் (சிஐஎஸ்எப்) பணிபுரிந்தவர் சந்தோஷ் குமார் பாண்டே. இவர் கடந்த 2001-ம் ஆண்டு வதோதராவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது அவருடன் பணிபுரியும் சக சிஐஎஸ்எப் வீரர், தனது வருங்கால மனைவியை அழைத்துக் கொண்டு பைக்கில் செல்வதை சந்தோஷ் குமார் பார்த்துள்ளார். அப்போது இருவரும் அங்குள்ள ஒரு பூங்காவுக்குள் சென்றுள்ளனர்.

சக வீரரின் வருங்கால மனைவியிடம்..
இதை பார்த்த சந்தோஷ் குமார், அந்த பூங்காவுக்கு சென்றிருக்கிறார். அங்கு இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்த சந்தோஷ் குமார், அவர்களை மிரட்டியுள்ளார். மேலும், சக வீரரின் வருங்கால மனைவியை தன்னிடம் இங்கேயே உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு சந்தோஷ் குமார் கேட்டுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் பயந்து அழுதிருக்கிறார். அப்போது, சக வீரர் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த வாட்ச்சை சந்தோஷ் குமாரிடம் கொடுத்து, தங்களை அங்கிருந்த செல்லவிடுமாறு கேட்டிருக்கிறார். வாட்ச்சை வாங்கிக்கொண்ட சந்தோஷ் குமாரும், அவர்களை அங்கிருந்த செல்ல அனுமதித்தார்.

டிஸ்மிஸ்
இதையடுத்து, மறுதினம், சந்தோஷ் குமாரின் அநாகரீக நடவடிக்கை குறித்து தனது உயரதிகாரிகளிடம் சக வீரர் புகார் தெரிவித்திருக்கிறார். பின்னர், இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்திய சிஐஎஸ்எப், சந்தோஷ் குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை 2002-ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்தனர். இதனை எதிர்த்து சந்தோஷ் குமார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதாரண குற்றத்துக்காக பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது என்றும், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள சிஐஎஸ்எப்-க்கும் 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.

"போலீஸாகவே இருந்தாலும்"..
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சிஐஎஸ்எப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே. மகேஸ்வரி இன்று தீர்ப்பளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சிஐஎஸ்எப் காவலர் சந்தோஷ் குமார் பாண்டே செய்த அநாகரீகமான செயல்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும், அவரது செயல்களையும் மிக மேலோட்டமாக பார்த்து அவசர கதியில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சந்தோஷ் குமாருக்கு வழங்கப்பட்டது அதிகபட்ச தண்டனை என கூறப்படுவதை ஏற்க முடியாது. அவரது செயல்கள் மிக மோசமாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. மேலும், சந்தோஷ் குமார் துணை ராணுவத்தில்தான் உள்ளார். அவர் போலீஸ் கிடையாது. போலீஸாகவே இருந்தாலும் பொதுமக்களிடம் அத்துமீறோ, மிரட்டவோ சட்டத்தில் இடமில்லை. எனவே அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டது சரியானதுதான் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications