சசிகலா, ஓபிஎஸ் கைகோர்த்து கட்சியை கைப்பற்றணும்.. வெகுண்டெழுந்த 100 தேவர் அமைப்புகள்.. பரபர கடிதம்!
சென்னை : சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட்டு அதிமுகவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி தென் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தேவர் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அ.தி.மு.கவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப் பட்டிருப்பது தென் மாவட்டங்களில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் போக்கு சாதி ரீதியான மோதலாகவும் உருவெடுத்தது.
இந்நிலையில், அ.தி.மு.கவை மீண்டும் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து மீட்டு, தேவரினத்துக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு காரணமானவர்களை தோற்கடிக்க வேண்டும் என அவர்களுக்கு தேவர் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

கட்சியில் இருந்து நீக்கம்
அதிமுகவில் வெடித்த ஒற்றை தலைமை மோதலைத் தொடர்ந்து கட்சியே இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார்.

புதிய நிர்வாகிகள்
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை வழங்கி வருகிறார். மேலும், பொதுக்குழு நடத்தியது செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்ட விதிகளின் படி செல்லாது என்றும் தெரிவித்து வருகிறார்.

தேவர் சமூக அமைப்புகள்
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடி வருகின்றனர். நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வரும் நிலையில், அதிமுகவை மீட்க ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகிய இருவரும் கைகோர்க்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேவர் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Recommended Video

திட்டம்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் ஒன்றாகச் சந்தித்து கூட்டம் நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில், சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைந்து செயல்பட வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். அதன்படி, சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் கூட்டாக கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இருவருக்கும் கடிதம்
அந்த கடிதத்தில், "அ.தி.மு.க.வை மீட்டு எடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். இதற்கு பொதுச்செயலாளர் சசிகலா, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒன்று சேர வேண்டும். இருவரும் கைகோர்த்து கட்சியை கைப்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான நீங்களும், உங்கள் விசுவாசியுமான ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்க்க வேண்டும். அதுதான் கழகத்தில் உள்ள ஒன்றரைக் கோடி தொண்டர்களின் விருப்பமாகும்.

அவமரியாதை
சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும். இது அவருக்கு மட்டுமல்ல தேவர் இனத்துக்கே செய்யப்பட்ட அவமரியாதையாக கருதுகிறோம். இதற்கு காரணமானவர்களை நாம் தோற்கடித்தே தீர வேண்டும். நம்மிடம் உள்ள துரோகிகளை வைத்து நம்மை வீழ்த்த நம் எதிரிகள் முயற்சி செய்கிறார்கள். இதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

குற்றச்சாட்டை உண்மையாக்குங்கள்
நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். நீங்கள் இருவரும் ரகசியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள். அதை உண்மையாக்குங்கள். வெளிப்படையாக இணையுங்கள். அவர்களது குற்றச்சாட்டுகளை உண்மை என்று நிரூபியுங்கள். நீங்கள் இருவரும் கைகோர்த்தால் அது பலன் உள்ளதாக இருக்கும். உங்கள் ஒற்றுமை கட்சிக்கும், இனத்துக்கும் இந்த காலக்கட்டத்தில் அவசியமான ஒன்றாகும். கட்சியின் நலனுக்கு இது கை கொடுக்கும். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற்று பயணத்தை தொடங்குங்கள்.

வேறு யாரும் வர முடியாது
உங்களுக்கு எதிராக வேறு யாரும் போட்டியாளர்களாக வர முடியாது. இது நிச்சயம். நாகப்பட்டினத்தில் இருந்து திருநெல்வேலி வரை, கோவையில் இருந்து வேலூர் வரை நீங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும்" என தேவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications